Touring Talkies
100% Cinema

Sunday, May 18, 2025

Touring Talkies

ஒளிப்பதிவாளர் எஸ்.பி.நிவாஸ் காலமானார்..!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தமிழ்ச் சினிமாவின் குறிப்பிடத்தக்க ஒளிப்பதிவாளர்களில் ஒருவராகத் திகழ்ந்த எஸ்.பி.நிவாஸ் இன்று கேரளாவில் கோழிக்கோட்டில் உடல் நலக் குறைவால் காலமானார்.

கேரளாவின் கோழிக்கோடில் பிறந்த நிவாஸ் சென்னை அடையாறு திரைப்படக் கல்லூரியில் ஒளிப்பதிவு பிரிவில் படித்துத் தேர்ச்சி பெற்றவர்.

புகழ் பெற்ற ஒளிப்பதிவாளரான அசோக்குமாரிடம் உதவியாளராகத் தனது பணியைத் துவக்கினார். பல திரைப்படங்களில் உதவி ஒளிப்பதிவாளராகப் பணியாற்றிய நிவாஸ், முதன்முதலாக 1975-ம் ஆண்டு சத்யதிண்டே நிழலில்’ என்ற மலையாளப் படத்தில்தான் தனி ஒளிப்பதிவாளராகப் பணியாற்றினார்.

அடுத்த ஆண்டு இவர் பணியாற்றிய ‘மோகனியாட்டம்’ என்ற மலையாளப் படத்தில் ஒளிப்பதிவு செய்தமைக்காக சிறந்த ஒளிப்பதிவுக்கான தேசிய விருதினைப் பெற்றார்.

இதன் பின்பு தமிழுக்கு வந்த இவர் முதலில் பணியாற்றிய திரைப்படம் இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் 16 வயதினிலே’. இத்திரைப்படத்தில் துவங்கி, அடுத்தடுத்த ஐந்து பாரதிராஜாவின் படங்களுக்கு தொடர்ச்சியாக ஒளிப்பதிவு செய்து சாதனை படைத்தார்.

1978-ல் ‘கிழக்கே போகும் ரயில்’, ‘சிகப்பு ரோஜாக்கள்’, ‘சொல்வா சவான்(ஹிந்தி)’, ‘வயசு பிலிட்டிண்டி(தெலுங்கு)’, ‘புதிய வார்ப்புகள்’(1979) ஆகிய பாரதிராஜாவின் தொடர்ச்சியான படங்களுக்கு ஒளிப்பதிவு செய்திருந்தார்.

மேலும் பாரதிராஜா நடிகராக அறிமுகமாகிய ‘கல்லுக்குள் ஈரம்’ படத்தை இயக்கியவரும் இவரே. இந்த ஒரு படம் மட்டுமில்லாமல் ‘நிழல் தேடும் நெஞ்சங்கள்’, ‘எனக்காகக் காத்திரு’, ‘செவ்வந்தி’ ஆகிய தமிழ்ப் படங்களையும் இயக்கியிருந்தார்.

இதன் பின்பு தமிழில் சலங்கை ஒலி’(1983), ‘கோழி கூவுது’(1982), ‘தனிக்காட்டு ராஜா’(1982), ‘கொக்கரக்கோ’(1983), ‘மை டியர் லிஸா’(1987), ‘செண்பகமே செண்பகமே’(1988), ‘எங்க ஊரு மாப்பிள்ளை’(1989), ‘ஊரு விட்டு ஊரு வந்து’(1990), ‘பாஸ் மார்க்’(1994), ‘செவ்வந்தி’(1994) ஆகிய படங்களுக்கும் ஒளிப்பதிவு செய்திருந்தார்.

தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளிலும் பல திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

‘16 வயதினிலே’ படத்தில் கிராமத்து இயல்பான வாழ்க்கையையும், இயல்பான ஒளியில் படமாக்கியிருந்தது அவரது தனித்திறமையைக் காட்டியது. அதேபோல் ‘சிகப்பு ரோஜாக்கள்’ படத்தில் மாடர்னான கலர்புல் படமாக ஒவ்வொரு பிரேமிலும் அவர் காட்டியிருந்தது அந்தப் படத்துக்கே சிறப்பு சேர்த்திருந்தது.

அவரது ஒளிப்பதிவின் உச்சமாக ‘சலங்கை ஒலி’ திரைப்படத்தைச் சொல்லலாம். அந்தப் படத்தின் அனைத்து பாடல் காட்சிகளிலும் ஒளிப்பதிவு மட்டுமே தனித்துத் தெரியும் அளவுக்கு மிகச் சிறப்பாக ஒளிப்பதிவினை வடிவமைத்திருந்தார் நிவாஸ்.

ஒளிப்பதிவாளர் நிவாஸின் இறப்புக்கு இரங்கல் தெரிவித்திருக்கும் இயக்குநர் இமயம் பாரதிராஜா, “என் திரைப் பயணமான 16 வயதினிலே’ முதல் தொடர்ந்து ஐந்து வெற்றிகளுக்கு துணை நின்ற  பெரும் படைப்பாளி.. இந்திய திரை உலகின் மிகச் சிறந்த ஒளிப்பதிவாளர்.. என் நண்பன் திரு.நிவாஸின் மறைவு எனக்குப் பெரும் அதிர்ச்சியளிக்கிறது. ஆழ்ந்த இரங்கல்கள்…” என்று குறிப்பிட்டுள்ளார்.

தமிழில் பல சிறந்த ஒளிப்பதிவாளர்களுக்கு முன்னோடியாக திகழ்ந்த நிவாஸ் அவர்களுக்கு டூரிங் டாக்கீஸ் இணையத் தளம் தனது நெஞ்சார்ந்த அஞ்சலியை செலுத்துகிறது..!

- Advertisement -

Read more

Local News