விஜய் நடித்த ‘மாஸ்டர்’ திரைப்படம் இன்று காலை அமேஸான் ஓடிடி தளத்தில் வெளிவந்துவிட்டது.
’மாஸ்டர்’ திரைப்படம் கடந்த 13-ம் தேதி பொங்கல் பண்டிகையையொட்டி உலகம் முழுவதும் வெளியானது. இந்தத் திரைப்படம் ஒரே வாரத்தில் 100 கோடியையும், இரண்டாவது வாரத்தில் 200 கோடி ரூபாயையும் உலகம் முழுவதும் வசூல் செய்ததாக தகவல்கள் வெளியாகின.
திரையிடப்பட்ட அனைத்துப் பகுதிகளிலும் நல்ல வசூலை கொடுத்துக் கொண்டிருந்த நிலையில் இந்தப் படம் அமேஸான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியிட வேண்டிய அவசியமென்ன என்பதில் சில வியாபார காய் நகர்த்தல்கள் இருந்தன என்கிறார்கள் தகவல் தெரிந்தவர்கள்.
இந்த ‘மாஸ்டர்’ படத்தை அமேஸான் நிறுவனத்திற்கு ஆறு மாதங்களுக்கு முன்பேயே படத்தின் தயாரிப்பாளர் 21 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்துவிட்டார். ஆனால் அப்போது போடப்பட்டுள்ள ஒப்பந்தத்தின்படி படம் தியேட்டரில் வெளியாகி 30 நாட்கள் கழித்துதான் ஓடிடியில் வெளியிட முடியும் என்று இரு தரப்புமே ஒப்புக் கொண்டிருந்தது.
இந்த நிலையில் இன்றைக்கு அமேஸானில் ‘மாஸ்டர்’ படத்தை வெளியிடுவதற்காக அமேசான் நிறுவனம் கூடுதலாக 15.5 கோடி ரூபாயை தயாரிப்பாளரிடம் கொடுத்திருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றனர்.
அதனால்தான் தியேட்டர்காரர்களுக்குக் கொடுத்த வாக்குறுதியையும் மீறி ‘மாஸ்டர்’ படத்தை திரையிட அதன் தயாரிப்பாளர் அமேஸானுக்கு அனுமதி கொடுத்திருப்பத்தாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையடுத்து ’மாஸ்டர்’ திரைப்படத்திற்காக அமேசான் நிறுவனம் தயாரிப்பாளருக்கு மொத்தம் 36 கோடி கொடுத்துள்ளதாகவும் இதில் 15.5 கோடி தற்போது கொடுக்கப்பட்ட கூடுதலான தொகை என்றும் கூறப்படுகிறது.