நடிகர் சிம்புவைப் போலவே நடிகர் சந்தானமும் பாஸ்ட் பார்வர்டில் தனது திரைப் பயணத்தை நடத்தத் துவங்கியிருக்கிறார் என்கிறார்கள் திரையுலகத்தினர்.
நடிகர் சந்தானத்தின் நடிப்பில் உருவான ‘சர்வர் சுந்தரம்’ மற்றும் ‘டிக்கிலோனா’ ஆகிய படங்கள் வெளியீ்ட்டுக்குத் தயார் நிலையில் உள்ளன.
இந்த நிலைமையில் கடந்த மாதம் ‘பாரீஸ் ஜெயராஜ்’ படத்தினை முழுமையாக முடித்துக் கொடுத்த சந்தானம், அடுத்த இரண்டே நாட்களில் அடுத்தப் படத்தின் படப்பிடிப்பை தொடரச் சென்றுவிட்டாராம்.
அந்தப் படம் ‘சபாபதி’. சத்தமே இல்லாமல் இந்தப் படத்தின் படப்பிடிப்பும் இடையிடையே நடத்தப்பட்டு இப்போது வெறும் 2 நாட்களில் மொத்தப் படப்பிடிப்பும் முடிந்துவிடும் அளவுக்கு இருக்கிறதாம்.
சமீபத்தில் நடிகர் சந்தானத்தின் பிறந்த நாளன்று வெளியான இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரின்போதுதான் இந்தப் படம் பற்றிய தகவலையே வெளியில் தெரிவித்தார்கள். இந்தப் படத்தை புதுமுக இயக்குநர் சீனிவாச ராவ் என்பவர் இயக்கி வருகிறார்.
ஆக. மொத்தம் அடுத்த மாத இறுதிக்குள் சந்தானம் நடிப்பில் உருவான நான்கு திரைப்படங்கள் வெளியீட்டுக்குத் தயார் என்ற நிலையில் காத்துக் கொண்டிருக்கும்.
இந்த நிலைமை தற்போது தமிழ்ச் சினிமாவில் யாருக்குமே கிடைக்காத ஒரு பெருமை என்றே சொல்லலாம்.
‘சர்வர் சுந்தரம்’ மற்றும் ‘டிக்கிலோனா’ ஆகிய படங்களை ஓடிடியில் வெளியிடலாம் என்றுதான் அந்தப் படங்களின் தயாரிப்பாளர்கள் முடிவு செய்திருந்தார்கள். ஆனால், இப்போது ‘மாஸ்டர்’ படத்திற்கு தியேட்டர்களில் கிடைத்திருக்கும் வரவேற்பு அவர்களை சற்று யோசிக்க வைத்திருக்கிறதாம்.
ஓடிடியா.. அல்லது நேரடியாக தியேட்டர்களாக என்பதை முடிவு செய்ய வேண்டிய இறுதியான தருணத்தில் இந்தப் படங்களின் தயாரிப்பாளர்கள் இருக்கிறார்கள்.
இன்னொரு பக்கம் சந்தானம் தற்போது தனது படங்களின் ஸ்கிரிப்ட்டுகளை வெளியில் இருக்கும் சில எழுத்தாளர்களுக்கும், நண்பர்களுக்கும் அனுப்பி இந்தக் கதை தனக்கு செட்டாகுமா.. ஏதாவது திருத்தம் செய்தால் சோபிக்குமா என்றெல்லாம் விசாரிக்கவும் ஆரம்பித்திருக்கிறார்.
இதெல்லாம் அவருடைய கேரியரை வலுப்படுத்த அவர் செய்யும் விஷயம் என்றாலும் சந்தானத்தின் இந்த திடீர் மாற்றம் அவருக்கும், அவரது ரசிகர்களுக்கும் நன்மை பயக்கும் என்றே கருதலாம்..!