தற்போது வெளியாகி பெரும் வெற்றியடைந்திருக்கும் விஜய்யின் ‘மாஸ்டர்’ படம் இந்தியில் ரீமேக்காக உள்ளது. இதன் ரீமேக் உரிமையை எண்டெமோல் ஷைன் மற்றும் சினி 1 ஸ்டூடியோ, 7 ஸ்கிரீன்ஸ் நிறுவனம் ஆகியவை இணைந்து பெற்றுள்ளன.
இந்த ரீமேக்கில் விஜய் கதாபாத்திரத்தில் நடிக்க ஹிரித்திக் ரோஷனை அணுகியிருக்கிறார்கள்.
இதேபோல் ‘மாநகரம்’ திரைப்படமும் ஹிந்தியில் படமாகிறது. இந்தப் படத்திற்கு இந்தியில் ‘மும்பைக்கர்’ என்று பெயர் வைத்துள்ளார்கள். இந்தப் படத்தில் முனீஸ்காந்த் வேடத்தில் விஜய் சேதுபதி நடிக்கவிருக்கிறார். சந்தீப் கிஷன் வேடத்தில் ஹிரித்திக் ரோஷனிடம் பேசியிருக்கிறார்கள்.
நயன்தாரா நடிப்பில் வெளியான ‘கோலமாவு கோகிலா’வும் இந்திக்குச் செல்கிறது. இதில் நயன்தாரா கதாபாத்திரத்தில் ஜான்வி கபூர் நடிக்கவிருக்கிறார். படத்தின் ‘குட்லக் ஜெர்ரி’. சித்தார்த் சென் குப்தா இந்தப் படத்தைத் தயாரிக்கிறார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்து மிகப் பெரிய வெற்றியைப் பெற்ற ‘கைதி’ படமும் இந்திக்கு செல்கிறது. இதில் கார்த்தி கேரக்டரில் அஜய் தேவ்கன் நடிக்கவிருப்பதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
புஷ்கர், காயத்ரி இயக்கத்தில் மாதவன், விஜய் சேதுபதி நடித்த ‘விக்ரம் வேதா’ படமும் இந்திக்கு செல்கிறது. இந்தப் படத்தை புஷ்கர்-காயத்ரி தம்பதியினரே இயக்கவுள்ளனர். மாதவன் வேடத்தில் சயீப் அலிகானும், விஜய் சேதுபதி வேடத்தில் ஹிரித்திக் ரோஷனும் நடிக்கவுள்ளனராம்.
சமீப ஆண்டுகளாக தமிழில் வெற்றி பெறும் திரைப்படங்கள் இந்தியில் மொழி மாற்றம் செய்யப்படுவது நமது தமிழ்த் திரைப்பட கதாசிரியர்கள் மற்றும் இயக்குநர்களுக்குக் கிடைத்த வெற்றியாகக் கருதலாம்.