கவிஞர் பிறைசூடன் தமிழ்த் திரையுலகத்தில் கவிஞர், பாடலாசிரியர், உரையாடல் ஆசிரியர் என்று பல்வேறு பணிகளிலும் திறமை பெற்றவர். இப்போது நடிகராகவும் உருமாறியிருக்கிறார்.
‘சூப்பர் ஸ்டார்’ ரஜினி தற்போது நடித்து வரும் ‘அண்ணாத்த’ படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் கவிஞர் பிறைசூடனும் நடித்திருக்கிறார்.
இந்தப் படத்தில் நடித்த அனுபவம் பற்றி சமீபத்தில் பேட்டியளித்திருக்கிறார் கவிஞர் பிறைசூடன்.
அவர் ‘அண்ணாத்த’ படம் பற்றிச் சொல்லும்போது, “நான் சென்ற வருடத்தின் இறுதியில் ஒரு நாள் கல்கத்தாவில் என் மகள் வீட்டில் இருக்கும்போது எனக்கு போனில் ஒரு அழைப்பு வந்தது. “அண்ணாத்த படத்தில் உங்களுக்கு ஒரு வேலை இருக்கு. வர முடியுமா…?” என்றார்கள்.
நான் அவசரமாக என் மனைவியுடன் சென்னைக்கு வந்து அவரை சென்னையில்விட்டுவிட்டு நான் மட்டும் ஹைதராபாத்துக்கு பேனா, பேப்பர்களோடு பயணித்தேன். எப்படியும் பாட்டெழுதத்தான் அழைத்திருக்கிறார்கள் என்று நினைத்துதான் போனேன்.
ஆனால் ஹைதராபாத்தில் அந்த செட்டுக்குப் போன பின்புதான் என்னை நடிக்க அழைத்திருக்கிறார்கள் என்பதே தெரியும். கொடுத்த உடையை போட்டுக் கொண்டு செட்டில் அமர்ந்திருந்தேன்.
அப்போது ரஜினி ஸார் அழைப்பதாகச் சொல்லி என்னை அழைத்துச் சென்றார்கள். ரஜினி எழுந்து நின்று என்னை வரவேற்றார். பக்கத்தில் உட்காரச் சொல்லி உபசரித்தார். அதுக்கப்புறம் வரிசையா மரியாதைகளும், உசரிப்புகளும், ‘காபி, வேணுமா.. டீ வேணுமா.. ஜூஸ் வேணுமா.. சூப் வேணுமா’ன்னு வரிசையா விசாரணைகளும் நடந்தன.
ஷூட்டிங்ல ஒரு மழை சீன். அதுல ரஜினி ஸார் நடிச்சார். மார்கழி மாசம் வேற. பக்கத்துலேயே அவருக்காக ஹீட்டர்லாம் வைச்சிருந்தாங்க. இருந்தாலும் அவர் ஷாட் முடிஞ்சப்புறம் போகாமல். பக்கத்துலேயே நின்னு மத்தவங்க என்ன நடிக்கிறாங்கன்னு அப்படியே ஈரத்தோடு நின்னு பார்த்துக்கிட்டேயிருந்தாரு.
நானாச்சும் இடைல, இடைல கேரவன் வேனுக்குப் போயிட்டு வந்தேன். ஆனால், அவரு சேர்லயே உக்காந்திருந்தாரு.. உள்ள வரும்போதுகூட எல்லார் பக்கமும் திரும்பி வணக்கம்ன்னு சொல்லிட்டுத்தான் உக்காருவார். அவர் இப்போ இருக்குற ஸ்டேஜ்ல இதெல்லாம் செய்யணும்ன்னு அவசியமே இல்லை. ஆனால் செய்றாரு பாருங்க. அதுதான் இப்போவரைக்கும் அவரை சூப்பர் ஸ்டாரகவே வைச்சிருக்கு..” என்று பாராட்டுகிறார் கவிஞர் பிறைசூடன்.