Friday, November 22, 2024

‘தீர்ப்புகள் திருத்தப்படலாம்’ படம் வெளியானதன் பின்னணியில் இருக்கும் பரபரப்பு கதை..!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

1982-ம் ஆண்டு இயக்குநர் எம்.பாஸ்கர் எழுதி, இயக்கி, தயாரித்த திரைப்படம் ‘தீர்ப்புகள் திருத்தப்படலாம்’. இந்தப் படத்தில் சிவக்குமார், அம்பிகா, சத்யராஜ், சசிகலா, வெண்ணிற ஆடை மூர்த்தி, வனிதா, ஒய்.ஜி.மகேந்திரன், வீரராகவன் மற்றும் பலர் நடித்திருந்தனர்.

இந்தப் படம் இயக்குநர் எம்.பாஸ்கர் இயக்கியிருந்த 5-வது திரைப்படம். இத்திரைப்படத்தைத் தயாரித்து முடித்து வெளியீட்டுக்குத் தயாரான நிலையில் விநியோகஸ்தர்கள் “படம் தேறாது” என்று சொல்லி வாங்காமல் தவிர்த்துக் கொண்டே வந்திருக்கிறார்கள்.

இதனால் கடன் வாங்கி படம் தயாரித்திருந்த இயக்குநர் எம்.பாஸ்கருக்கு வட்டி மேல் வட்டியாகி கடன் தொகை ஏறிக் கொண்டேயிருக்கிறது. இந்த நேரத்தில்தான் கதாசிரியர் கலைஞானம், எம்.பாஸ்கரை மிக நீண்ட நாட்களுக்குப் பிறகு சந்தித்திருக்கிறார்.

இதன் பின்பு நடந்த கதையை கலைஞானமே சொல்கிறார்.

“இயக்குநர் பாஸ்கர் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. காரணம் என்னுடைய முதல் தயாரிப்பான ‘பைரவி’ படத்தை அவர்தான் இயக்கியிருந்தார். அது மாபெரும் வெற்றியைப் பெற்றது என்பதால், அவர் மீது எனக்கு எப்போதுமே மிகுந்த மரியாதை உண்டு.

அவரை அவரது அலுவலகத்தில் நான் சந்தித்துப் பேசியபோது தான் இயக்கிய ‘தீர்ப்புகள் திருத்தப்படலாம்’ படம் வியாபாரம் ஆகவில்லை என்று மிகவும் வருத்தப்பட்டார். அப்போது பாஸ்கரின் குருநாதரான இயக்குநர் ஸ்ரீதரும் உடன் இருந்தார்.

“சரி பாஸ்கர். முதல்ல படத்தைப் போட்டுக் காட்டுங்க. படத்தைப் பார்ப்போம். அப்புறமா என்ன செய்யறதுன்னு யோசிப்போம்..” என்றேன். சொன்னது போலவே ‘மனோரமா’ தியேட்டரில் எனக்குத் ‘தீர்ப்புகள் திருத்தப்படலாம்’ படத்தைப் போட்டுக் காட்டினார் பாஸ்கர். அப்போது எங்களுடன் இயக்குநர் ஸ்ரீதரும் படம் பார்த்தார்.

படம் பார்த்து முடிந்தவுடன் எனக்குத் தோன்றியதை பாஸ்கரிடம் சொன்னேன்.

“படத்தில் நீங்கள் சத்யகலாவை தைரியமான பெண்ணாக காட்டியிருக்கிறீர்கள். ஆனால், கடைசியில் தனது கணவன் செய்த தவறினால் அவனை கொலையும் செய்கிறாள். செய்துவிட்டு போலீஸிடமிருந்து அதை மறைப்பதாகவும் சொல்லியிருக்கிறீர்கள். இங்கேயே லாஜிக் செத்துப் போய்விடும். பார்வையாளர்களுக்கும் கதை மீதான நம்பகத்தன்மை இல்லாமல் போயிரும். அதனால் விநியோகஸ்தர்கள் சொன்னது சரிதான்.

இதற்குப் பதிலாக நாம் வேறு சில காட்சிகளை புதிதாக எடுத்து இணைப்போம். சத்யகலாவுக்கு ஒரு பெண் குழந்தை இருப்பதாகவும், அந்தக் குழந்தைக்கு கண் பார்வையும் இல்லை. பேச்சும் வராது.. அந்தக் குழந்தையை ஒரு மருத்துவமனையில் வைத்து பராமரித்து வருகிறார் சத்யகலா. இப்போது கணவரும் இறந்து, தானும் ஒரு குற்றவாளியாகி ஜெயிலுக்குப் போய்விட்டால், தனது பெண் குழந்தையை யார் பார்த்துக் கொள்வது..? எப்படி வளர்ப்பது என்பதை யோசிப்பதால்தான் அவள் தான் கொலை செய்ததை மறைக்கிறாள் என்று மாற்றுவோம்..” என்று சொன்னேன்.

இதைக் கேட்டவுடன் எங்களுடன் அமர்ந்திருந்த இயக்குநர் ஸ்ரீதர் கை தட்டி அதை வரவேற்றார். என்னைப் பாராட்டினார். அதேபோல் சில காட்சிகளை மீண்டும் எடுத்து அதையும் ஒட்டி இப்போது விநியோகஸ்தர்களுக்கு போட்டுக் காட்டினார் இயக்குநர் எம்.பாஸ்கர். ஆனால், இப்போதும் ஏனோ விநியோகஸ்தர்கள் படத்தை வாங்க தயக்கம் காட்டினார்கள்.

இதனால் நானே இன்னொரு வழியையும் இயக்குநர் பாஸ்கரிடம் தெரிவித்தேன். “நான் தற்போது ‘இளஞ்சோடிகள்’ படத்தை எடுத்துக் கொண்டிருக்கிறேன். அந்தப் படத்தில் கார்த்திக்கும், ராதாவும் நடித்து வருகிறார்கள். என்னுடைய அடுத்தப் படத்தை நீங்கள் இயக்குவதாகவும், அதில் கார்த்திக், ராதா இருவரும் நடிப்பதாகவும் அறிவிப்பை வெளியிட்டு விடுகிறேன்.

என்னுடைய தயாரிப்பில் நீங்கள் படம் இயக்குவதாக அறிவிப்பு வந்தாலே விநியோகஸ்தர்கள் கொஞ்சம் ஆர்வப்படுவார்கள். அப்படி வருபவர்களிடத்தில் இந்தப் படத்தைத் தள்ளிவிடுவோம். முதலில் நாம் ச்சும்மா ஒரு பாடலை ஷூட் செய்வோம்…” என்றேன்.

பாஸ்கரும் இதை ஏற்றுக் கொள்ள கார்த்திக், ராதாவிடம் உடனடியாக கால்ஷீட்டை வாங்கி பாடல் காட்சியை மட்டும் படமாக்கினோம். இதைக் கேள்விப்பட்ட சில விநியோகஸ்தர்கள் திரும்பவும் வந்து பாஸ்கரின் ‘தீர்ப்புகள் திருத்தப்படலாம்’ படத்தின் சில ஏரியாக்களை வாங்கிக் கொள்வதாகச் சொன்னார்கள். இவர்களை வைத்தே மற்றவர்களிடத்திலும் படத்தை விற்றோம்.

படமும் வெளியாகி நன்றாக ஓடியது.. சில நேரங்களில் ஒரு படத்தை வெளியிட இப்படியும் சில வேலைகளைச் செய்ய வேண்டியிருந்தது..” என்கிறார் கதாசிரியர் கலைஞானம்.

- Advertisement -

Read more

Local News