கொரோனா வைரஸ் பரவலின் இரண்டாம் அலையைக் காரணம் காட்டி ‘காட்டேரி’ திரைப்படத்தின் வெளியீட்டைத் தள்ளி வைத்திருக்கும் ஸ்டூடியோ கிரீன் நிறுவனத்தின் தயாரிப்பாளரான ஞானவேல்ராஜாவை, தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத் தலைவரான திருப்பூர் சுப்ரமணியம் வன்மையாகக் கண்டித்துள்ளார்.
ஸ்டூடியோ கிரீன் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் கே.ஈ.ஞானவேல்ராஜா தயாரித்துள்ள புதிய திரைப்படம் ‘காட்டேரி’.
இந்தத் திரைப்படம் நாளை வெளியாவதாக இருந்தது. இந்த நிலையில் கொரோனா வைரஸின் இரண்டாம் அலை பரவத் துவங்கும் சூழல் இருப்பதால் ‘காட்டேரி’ படத்தின் வெளியீட்டை ஒத்தி வைப்பதாக தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா நேற்றைக்கு ஒரு அறிக்கை மூலமாகத் தெரிவித்திருந்தார்.

இந்த அறிக்கைக்கு தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவரான திருப்பூர் சுப்ரமணியம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் அனுப்பியுள்ள ஆடியோ செய்தியில், “ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் வெளியிட்டுள்ள இந்த அறிக்கை வருத்தத்திற்குரியது. ஒரு படத்தை வெளியிடுவதும், வெளியிடாததும் அவர்களுடைய விருப்பம்.
‘சொந்தக் காரணங்களுக்காக படத்தை வெளியிடவில்லை ‘என்று சொல்லியிருக்கலாம். ஆனால், ‘கொரோனா இரண்டாம் அலை’ என்று காரணம் சொல்லியிருப்பது வருந்தத்தக்கது.
மத்திய சுகாதார அமைச்சகம் இரண்டு நாட்களுக்கு முன்பாக ஒரு கூட்டம் நடத்தியது. இந்தக் கூட்டத்தில் திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தைச் சேர்ந்தவர்கள்கூட கலந்து கொண்டனர்.

“கொரோனா இரண்டாவது அலைக்கு இந்தியாவில் வாய்ப்பில்லை…” என்று மத்திய அரசு தெளிவாகச் சொல்லியுள்ளது. அப்படி வாய்ப்பில்லாத நிலையில் இந்த விஷயத்தைச் சொல்லியிருப்பது வருத்தத்திற்குரியது.
நேற்றைக்கு வெளியான ‘வொண்டர்வுமன்’ படத்திற்குக் கிடைத்த வரவேற்பினை இவர்கள் அறிந்திருக்க மாட்டார்கள். மாலை, இரவுக் காட்சிகளில் மொத்தமாக 811 ரசிகர்கள் வந்து படம் பார்த்துச் சென்றுள்ளனர்.
இப்படியிருக்கும்போது, தேவையில்லாமல் ‘கொரோனா வைரஸ் பரவுகிறது’ என்று வதந்தியைப் பரப்புவது உண்மையில் வருத்தம் அளிக்கும் செய்தி. தயவு செய்து இது போன்ற தவறான செய்திகளைப் பரப்புரை செய்ய வேண்டாம் என்று உங்களைக் கேட்டுக் கொள்கிறோம்.
உண்மையில், இப்போதுதான் மக்கள் திரையரங்குகளுக்கு வர ஆரம்பத்திருக்கிறார்கள். இப்போது நீங்கள் இது போன்ற வதந்திகளைப் பரப்புகிறீர்கள். இது குறித்து மிகவும் வருந்துகிறோம்..” என்று கூறியுள்ளார்.