‘பல்லு இருக்கிறவன் பக்கோடா சாப்பிடுகிறான்’ என்பதுபோல பணம் உள்ளவர்கள் புத்தம் புது கார்கள் வாங்குவதில் தவறில்லைதான்.
ஆனால், 32 வருட கால பழமையான காரை மிக அதிக விலைக்கு வாங்கினால்.. அதை எப்படி ஏற்றுக் கொள்வது..?
நடிகர் விஜய் சேதுபதியிடம் ஏற்கெனவே ஆடி, பி.எம்.டபிள்யூ போன்ற விலையுயர்ந்த கார்கள் இருந்தாலும், தற்போது புதிதாக ரோல்ஸ் ராய்ஸ் காரையும் வாங்கியிருக்கிறார்.
ரோல்ஸ் ராய்ஸ் கார்களை இப்போது புதிதாக வாங்குவதாக இருந்தால்கூட யார் வேண்டுமானாலும் வாங்கிவிட முடியாது. சமூகத்தில் மிக உயர்ந்த அந்தஸ்தில் இருப்பவர்கள்.. பெருமைக்குரியவர்கள்.. அவர்கள் சார்ந்த துறையின் அடையாளமாக இருப்பவர்கள் என்று ஏகப்பட்ட பார்மாலிட்டிகள் இருக்கின்றன.
கடந்த ஆண்டு ரோல்ஸ் ராய்ஸ் காரை வாங்க விருப்பப்பட்டு விண்ணப்பித்த 100-க்கும் மேற்பட்ட இந்திய கோடீஸ்வரர்களின் மனுவை ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் தள்ளுபடி செய்துவிட்டது. இப்படியொரு கண்டிஷனுடன்தான் அந்தக் கார் உலகம் முழுவதும் விற்பனையாகி வருகிறது.
தமிழ்ச் சினிமாவில் நடிகர் விஜய், நடிகர் தனுஷ், இயக்குநர் ஷங்கர் ஆகிய மூவரும்தான் இந்தக் காரை வாங்கியிருக்கிறார்கள். இந்தக் காரை வாங்க மற்றவர்கள் ஏன் முயலவில்லை என்றால்.. இந்தக் காரை வாங்கினால் அது யானையை வாங்குவது போலத்தான். தீனி போட்டு மாள முடியாது.
ரோல்ஸ் ராய்ஸ் காரில் ஏதாவது சிறிய சிராய்ப்பு ஏற்பட்டால்கூட அதைச் சரி செய்யும் ஆகும் செலவில் இன்னொரு குட்டி காரையே வாங்கிவிடலாம். ஏதாவது ஒரு உதிரி பாகத்தை மாற்றுவதாக இருந்தால்கூட அதை இறக்குமதி செய்துதான் செய்தாக வேண்டும். சர்வீஸ் செலவே சில லட்சங்களைத் தொடும் என்பதால்தான் கூந்தல் உள்ள மாமிகள் மட்டுமே கொண்டை போடுவதுபோல இதைத் தாங்கும் சக்தியுள்ளவர்கள் மட்டுமே இதை வாங்கியிருக்கிறார்கள்.
இந்த நேரத்தில் இப்போது இந்த லிஸ்ட்டில் நடிகர் விஜய் சேதுபதியும் சேர்ந்திருக்கிறார்.
விஜய் சேதுபதி சமீபத்தில் ஒரு ரோல்ஸ் ராய்ஸ் காரை வாங்கியிருக்கிறார். ஆனால், இந்தக் கார் புதிய கார் அல்ல. 1968-ம் ஆண்டின் மாடல் கார் என்பதுதான் இதில் இருக்கும் சுவையான செய்தி.
38 ஆண்டுகளுக்கு முந்தைய கார் என்றாலும் இப்போதும் புதிய கார்களுக்கு சவால்விடும் வகையில் ஓடுகிறதாம். பார்த்தவுடனேயே வாங்கியாக வேண்டும் என்ற ஆசையைத் தூண்டிவிட்டதாம் அந்தக் கார்.
அப்புறமென்ன..? இப்போது அந்தக் காரில்தான் விஜய் சேதுபதி வலம் வந்து கொண்டிருக்கிறார்.