இயக்குநர் கரு.பழனியப்பன் இயக்கிய முதல் திரைப்படம் ‘பார்த்திபன் கனவு’. அந்தப் படத்தில் நாயகியாக3 சிநேகா நடித்திருந்தார். நாயகியை முன்னிலைப்படுத்திய படமாக இருந்ததால் சிநேகா இந்தப் படத்திற்குப் பிறகு பெரிதும் பேசப்பட்டார். படமும் கொண்டாடப்பட்டது.
ஆனால் இந்தப் படத்தில் முதலில் நாயகியாக நடிக்க ஜோதிகாவைத்தான் அணுகியிருக்கிறார் இயக்குநர் கரு.பழனியப்பன்.
இது பற்றி அவர் அளித்த பேட்டியில், “துள்ளாத மனமும் துள்ளும்’ படத்தில் இயக்குநர் எழில் ஸாரிடம் நான் உதவியாளராகப் பணியாற்றியபோதுதான் அந்தப் படத்தில் நாயகியாக நடித்த ஜோதிகா எனக்குப் பழக்கமானார்.
அவருக்கு பிராம்ட் மூலமாக வசனத்தை நான்தான் பேசிக் காட்டுவேன். இதனாலேயே அவருக்கும், எனக்குமான நட்பு அந்தப் படத்தில் பெரிதாக வளர்ந்திருந்தது.

சத்யஜோதி பிலிம்ஸில் ‘பார்த்திபன் கனவு’ படத்தை இயக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தபோது நாயகி கதாபாத்திரத்திற்கு நான் முதலில் அணுகியதும் ஜோதிகாவைத்தான். முழுக் கதையையும் கேட்டுவிட்டு “வொண்டர்புல்.. நானே பண்றேன்…” என்று சொல்லி ஆர்வமாக முன் வந்தார்.
அவருடைய மேனேஜர் சத்யஜோதி அலுவலகத்திற்கு வந்து தயாரிப்பாளர் தியாகராஜன் ஸாரிடம் பேசினார். பிறகு சில நாட்கள் கழித்து தயாரிப்பாளர் தியாகராஜன் ஸார் என்னிடம், “ஜோதிகா இந்தப் படத்தில் இல்லை. வேற நடிகையைச் சொல்லுங்க…” என்றார்.

‘ஜோதிகா இல்லை’ என்றது எனக்கு அதிர்ச்சியைத் தந்தாலும் தயாரிப்பில் பிரச்சினையென்றால் நாம் எதுவும் செய்ய முடியாது என்று நினைத்துக் கொண்டேன். அடுத்து சிநேகா பெயரைக் கூறினேன். தியாகராஜன் ஸாரும் “ஓகே” என்று சொல்ல.. சிநேகாவிடம் சென்று கதையைக் கூறினேன். அவரும் “ஓகே” என்றார். இப்படித்தான் ஜோதிகா போய் சிநேகா இந்தப் படத்தின் உள்ளே வந்தார்.

இந்தப் படத்தின் பூஜை நிகழ்ச்சி விஜயா-வாஹினி ஸ்டூடியோவில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு முதல் ஆளாக வந்தவர் ஜோதிகாதான். பின்புதான் சிநேகா வந்தார். சிநேகாவிடம் ஜோதிகா, “இந்தப் படத்தின் கதை எனக்குத் தெரியும். நல்ல கதை. பீமேல் ஓரியண்ட்டட் கதை. நல்ல பெயர் எடுக்கலாம்.. நல்லா நடிச்சீன்னா உனக்குக் கண்டிப்பா நல்ல பெயர் கிடைக்கும்..” என்று வாழ்த்துச் சொல்லிவிட்டுப் போனார். இது நான் எதிர்பார்க்காத வாழ்த்து..” என்றார் இயக்குநர் கரு.பழனியப்பன்.