‘சூப்பர் ஸ்டார்’ ரஜினி சில நேரங்களில் மிக விரைவாக முடிவெடுத்து எதையும் எதிர்பார்க்காமல் செய்து கொடுப்பார் என்று பலரும் சொல்வார்கள். அப்படியொரு உண்மைச் சம்பவத்தை இப்போது சொல்லியிருக்கிறார் இயக்குநர் மெளலி.
இயக்குநர் மெளலி கதை எழுதி, இயக்கிய ‘நன்றி மீண்டும் வருக’ படத்தில் நடிகர் ரஜினி பணம் எதுவும் வாங்கிக் கொள்ளாமல், கேட்ட அரை மணி நேரத்தில் ஷூட்டிங்கிற்குத் தயாராகி நடித்துக் கொடுத்திருக்கிறார்.
இது பற்றி இயக்குநர் மெளலி கூறுகையில், “நான் எழுதி இயக்கிய ‘நன்றி மீண்டும் வருக’ படத்தில் நாயகன் பிரதாப்போத்தன். கதைப்படி அவர் ஒரு சினிமா ஹீரோ. தினமும் 3 ஷிப்ட் கால்ஷீட் கொடுத்து நடிக்கும் அளவுக்கு பிஸியானவர் அவர்.
அவருக்கு நெருக்கமானவர்களெல்லாம் பிரதாப்பிடம் திருமணம் செய்து கொண்டு செட்டிலாகும்படி வற்புறுத்துவார்கள். பிரதாப் அதை ஏற்றுக் கொள்ள மறுப்பார். “திருமணம் செய்தால் இன்னொருவரின் பேச்சுக்குக் கட்டுப்பட வேண்டி வரும். எனக்கு அது பிடிக்காது…” என்பார்.

அப்போது இது பற்றி பிரதாப்பிற்கு அட்வைஸ் கொடுக்க சீனியர் நடிகர்களிடம் கருத்து கேட்பதுபோல காட்சி வைத்தால் பொருத்தமாக இருக்கும் என்று எனக்கும் பிரதாப்புக்கும் தோன்றியது.
அப்போது எங்கள் மனதில் இருந்தது இரண்டே பேர்தான். ஒருவர் கமல்ஹாசன். மற்றவர் ரஜினிகாந்த். கமல்ஹாசனை எனக்கு நன்கு தெரியும். ஆனால், அவர் அப்போது அமெரிக்காவில் இருந்தார். அதனால், ரஜினியை தொடர்பு கொள்ளலாம் என்று நினைத்தோம். ஆனால், ரஜினியை எனக்குத் தெரியாது. எப்படி அவரை தொடர்பு கொள்வது என்று யோசித்தோம்.
அந்த நேரத்தில் தெய்வாதீனமாக அடுத்த ப்ளோரில் ராமாநாயுடுவின் ஒரு படத்தில் ரஜினி நடித்துக் கொண்டிருந்தார். இது தெரிந்ததும் எங்களுக்கு சந்தோஷமாகிவிட்டது. சரி. அவரிடத்தில் நேரில் சென்று கேட்கலாம் என்று நினைத்து நானும், பிரதாப்பும் சென்றோம்.

ஒரு ஷாட் முடிந்து வெளியில் வந்து அமர்ந்தார் ரஜினி. அப்போது நாங்கள் அவரைச் சந்தித்து இந்த விஷயத்தைச் சொன்னோம். சொன்னவுடன் “குட் ஐடியா.. செய்யலாமே.. நல்ல விஷயம்தான்…” என்றார்.
உடனே நாங்களும் சந்தோஷமாகி, “நீங்க எப்போ ப்ரீன்னு சொல்லுங்க ஸார். அப்போ எடுத்துக்கலாம்…” என்றோம். “நான் இப்பவே ப்ரீதான். இந்த ஷூட் முடிஞ்சதும் எடுத்துக்கலாம். முடியுமா…?” என்றார்.
உடனேயே எங்களுக்கு அதிர்ச்சி கலந்த ஆச்சரியம். நாங்களும் சட்டுன்னு “ஓகே” சொன்னோம். அந்தப் படத்துக்கு பி.சி. ஸ்ரீராம்தான் கேமிராமேன். அவர், நான், பிரதாப் போத்தன், கேமிரா அஸிஸ்டெண்ட்ஸ் எல்லாரும் ரெடியா இருந்தோம்.
அந்த ஷூட்டிங் முடிஞ்சதும் ரஜினி தன்னோட பியட் கார்ல வீட்டுக்குக் கிளம்பினார். அதே கார்ல நானும், பிரதாப் போத்தனும் கிளம்பினோம். பி.சி.யும், அவரோட உதவியாளர்களும் பின்னாடியே வந்தாங்க.

வீட்டுக்கு வந்ததும் ரஜினி குளிச்சிட்டு நெத்தில விபூதி பூசிட்டு வந்தார்.. “யார் அஸிஸ்டெண்ட் டைரக்டர்..?”ன்னு கேட்டுட்டு ஸ்கிரிப்ட் பேப்பரை வாங்கிக்கிட்டு அந்த அஸிஸ்டெண்ட் டைரக்டர் தோள்ல கை போட்டுக்கிட்டு அப்படியே உலாத்த ஆரம்பிச்சார் ரஜினி. கிட்டத்தட்ட 15 நிமிஷம் கழிச்சு வந்து “நான் ரெடி”ன்னாரு.. அப்படித்தான் அவரோட ஷூட்டிங் நடந்து முடிந்தது.
“ஒரு தேதில டப்பிங்குக்கு சொல்றோம் ஸார்…” என்றேன். உடனேயே “மறக்காமல் கூப்பிட்டிருங்க. வந்தர்றேன்…” என்றார். சொன்னது போலவே வந்து டப்பிங்கும் பேசிக் கொடுத்தார்.
எங்க தயாரிப்பாளர்தான் குழம்பிட்டார். ரஜினி பெரிய நடிகராச்சே.. எவ்வளவு சம்பளம் கொடுக்குறதுன்னு யோசிச்சிட்டிருந்தார். அப்புறம் அவரே ரஜினிகிட்ட “ஸார்.. சம்பளம் எவ்வளவுன்னு சொன்னீங்கன்னா..?”ன்னு இழுத்தார். ரஜினி “நோ.. நோ.. வேண்டாம்..” என்று ஒற்றை வரியில் சொல்லிவிட்டார்.
நாங்க தற்செயலா கேட்கலாம்ன்னு நினைச்சுக் கேட்டு, அது எங்க படத்துக்கே மிகப் பெரிய விளம்பரமாவே கிடைச்சிருச்சு..” என்று பெருமையோடு சொல்லியிருக்கிறார் இயக்குநர் மெளலி.