திரைப்படத் தயாரிப்பு நேரத்தில் பல நேரங்களில் பலவித சிக்கல்கள் வந்து நிற்கும். அதையெல்லாம் சமாளிப்பதுதான் தயாரிப்பு நிர்வாகிகளின் வேலை. வருகின்ற வித்தியாசமான வேலைகளையெல்லாம் திறம்பட சமாளித்து செய்து முடிப்பதுதான் அவர்களது திறமை.
அந்தத் திறமையிருந்தாலும் பல நேரங்களில் அவமானப்படவும் நேரிடும். அதையெல்லாம் பொருட்படுத்தாமல் வேலை செய்தால் மட்டுமே இந்தத் துறையில் நீடித்து நிலைத்து நிற்க முடியும்.
அப்படியொரு அவமானத்தை சந்தித்த சம்பவத்தைப் பற்றி ஒரு வீடியோ பேட்டியில் சொல்லியிருக்கிறார் பிரபல தயாரிப்பு நிர்வாகியான ராமதுரை.
அவர் இது குறித்துப் பேசும்போது, “சிவாஜி புரொடெக்சன்ஸ் தயாரித்த ‘மன்னன்’ படத்தில் நான் தயாரிப்பு நிர்வாகியாகப் பணியாற்றினேன். இந்தப் படத்தில் அப்போது தெலுங்கில் சூப்பர் ஸ்டாரினியாக இருந்த விஜயசாந்தியும் நடித்தார்.
அவருடன் நான் தெலுங்கில் பேசுவேன். தெலுங்கு பேசியதாலேயே என்னுடன் மிக நன்றாகப் பழகினார். படக் குழுவினருடன் மிகுந்த ஒத்துழைப்பு கொடுத்தார். மரியாதையாகப் பேசுவார்.

ஆனால் வேறொரு நடிகையிடம் இதற்கு நேர்மாறான ஒரு சம்பவத்தை நான் சந்தித்தேன். அவர் மூத்த நடிகையான எஸ்.வரலட்சுமி. மிகவும் ஆணவம் பிடித்தவர். அவருடைய பேச்சே அப்படித்தான் இருக்கும். அவர் நடித்த ஒரு படத்தில் நான் பணியாற்றினேன். அப்போது கன்டினியூட்டிக்காக ஒரு புடவை தேவைப்பட்டது. அந்தப் புடவை வரலட்சுமியிடம் இருந்தது.
அதைக் கேட்டு அவருடைய வீட்டுக்குப் போனேன். “அந்தப் புடவை இப்போ வேணும்மா. கன்டினியூட்டி ஷாட்டுக்குத் தேவைப்படுகிறது…” என்று கேட்டேன். அந்தம்மாவுக்கு வந்ததே கோபம். அந்தப் புடவையை கொண்டு வந்து என் முகத்தில் வீசியெறிந்தார். என் வாழ்க்கையில் நான் சந்தித்த மிகப் பெரிய அவமானம் இதுதான்…” என்று வேதனையுடன் கூறியிருக்கிறார்.