Friday, November 22, 2024

நள்ளிரவில் இயக்குநரை தனியே விட்டுவிட்டு தயாரிப்பு யூனிட்டுடன் ஓடிய தயாரிப்பாளர்..!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

இப்படியெல்லாம் ஒரு இயக்குநரை அவமானப்படுத்த முடியுமா என்பதுபோல தன்னுடைய திரையுலக வாழ்க்கையில் மிகப் பெரிய அவமானத்தைச் சந்தித்திருக்கிறார் இயக்குநரும், நடிகருமான மனோபாலா.

இது பற்றி அவருடைய யு டியூப் சேனலில் அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் பேசும்போது, “இது நடந்தது 1983-ம் வருஷம். தயாரிப்பாளர் எஸ்.ஏ.ராஜ்கண்ணு தயாரித்த திரைப்படம் ‘பொண்ணு புடிச்சிருக்கு’. இந்தப் படத்தை முதலில் இயக்கவிருந்தது நான்தான். மொத்த யூனிட்டும் அவுட்டோர் ஷூட்டிங்கிற்காக கிளம்பி வந்திருந்தோம்.

இந்தப் படத்தில் நடிப்பதற்காக ‘தேஜாஸ்ரீ’ என்ற பெண்ணை ஆந்திராவில் இருந்து நான் அழைத்து வந்திருந்தேன். அந்தப் பெண்ணிற்கு சரியாக நடிப்பு வரவில்லை. கூச்சம், வெட்கம் இதெல்லாம் சுத்தமாக வரவில்லை. இதை ஒரு நாள் முழுவதும் அந்தப் பெண்ணுக்கு சொல்லிக் கொடுத்துவிட்டு பின்பு, அடுத்த நாள் ஷூட்டிங்கை தொடரலாம் என்று சொல்லியிருந்தேன்.

அன்றிரவு ஹோட்டலில் தூங்கிவிட்டு மறுநாள் காலை எழுந்தபோது என்னையும், கேமிராமேனையும் தவிர மொத்த யூனிட்டும் காணவில்லை. அனைவரையும் அழைத்துக் கொண்டு தயாரிப்பாளர் ஷூட்டிங்கிற்குக் கிளம்பிவிட்டார்.

நாங்கள் காரணம் புரியாமல் கீழே வந்து பார்த்தபோது ரிசப்ஷனில் எங்கள் இருவருக்கும் சேர்த்து 600 ரூபாயைக் கொடுத்து வைத்திருக்கிறார் தயாரிப்பாளர். “அவங்களை மெட்ராஸுக்குக் கிளம்பிப் போகச் சொல்லுங்க” என்று சொல்லியிருந்தார் தயாரிப்பாளர். எனக்கு டைரக்சன் சரியா வரலைன்னு தயாரிப்பாளர் எஸ்.ஏ.ராஜ்கண்ணு சொன்னாராம்.

எனக்கு மிகப் பெரிய அவமானமாக இருந்தது. அந்த அவமானத்துடனேயே பஸ்ஸில் கிளம்பி சென்னை வந்து சேர்ந்தேன். அன்றைக்கே நினைத்தேன். நான் ஒரு நல்ல இயக்குநராக வந்து காட்ட வேண்டும் என்று உறுதியெடுத்தேன்.

அடுத்து 8 மாதங்கள் எந்தப் பத்திரிகையாளர்களையும் சந்திக்காமல் ஒதுங்கியிருந்தேன். கதைகளை எழுதினேன். வாய்ப்பு தேடி அலைந்தேன். கடைசியாக ‘பிள்ளை நிலா’ படத்தை இயக்கும் வாய்ப்பு என் குருநாதர்களில் ஒருவரான கலைமணி மூலமாக எனக்குக் கிடைத்தது.

அதன் பின் வரிசையாக பல படங்களை இயக்கினேன். நானும் ஒரு குறிப்பிடத்தக்க இயக்குநர்களில் ஒருவனாக வளர்ந்த பின்பு.. ஒரு நாள் பாம்குரோவ் ஹோட்டலுக்குச் சென்றிருந்தேன். அப்போது ஒருவர் “டைரக்டரே…” என்று அழைத்தார். யார் அழைத்தது என்று தேடி அவரருகில் போய் பார்த்தேன்.

அது தயாரிப்பாளர் எஸ்.ஏ.ராஜ்கண்ணு. “என்னங்க ஸார்…?” என்றேன். “நம்ம கம்பெனிக்கு ஒரு படம் பண்ணிக் குடுங்களேன்…” என்றார். இந்த ஒரு நாளுக்காகத்தான் இத்தனை ஆண்டுகளாக நான் காத்திருந்தேன் போலும். “ஸார்.. உங்க பார்வையில நான் இயக்குநரே இல்லை. உங்களுக்கு இயக்குநரா இங்க பல பேர் இருக்காங்க.. அவங்களை வைச்சே நீங்க படம் பண்ணுங்க.. நான் உங்களுக்குப் படம் பண்ண மாட்டேன்..” என்று உறுதியாகச் சொல்லிவிட்டுச் சென்றேன்.

இந்தச் சம்பவம் நடந்து பல ஆண்டுகள் ஆனாலும் இன்னமும் என்னால் மறக்க முடியாத ஒரு அவமானச் சம்பவம் இதுதான்..” என்றார் இயக்குநர் மனோபாலா.

- Advertisement -

Read more

Local News