நடிகர் விஜய்யின் அப்பாவான இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் தனது மகனின் பெயரில் ‘அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம்’ என்ற பெயரில் ஒரு கட்சியை டெல்லியில் உள்ள தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய மனு அளித்திருந்தார்.
இந்தச் செய்தி வெளியானதும் அதிர்ச்சியான நடிகர் விஜய், “அந்தக் கட்சியில் தனது ரசிகர்கள் யாரும் சேர வேண்டாம்…” என்றும், “அந்தக் கட்சியில் தனது புகைப்படத்தையோ, தனது பெயரையோ பயன்படுத்தினால் சட்டப்படி நடவடிக்கை எடு்ப்பேன்…” என்றும் ஒரு அறிக்கையின் மூலமாக தனது அப்பாவையே எச்சரித்திருந்தார்.
இந்த நிலைமையில் எஸ்.ஏ.சந்திரசேகரின் மனைவியும், நடிகர் விஜய்யின் அம்மாவுமான ஷோபா சந்திரசேகரும் கட்சியின் பொருளாளர் பதவியிலிருந்து விலகுவதாக பகிரங்கமாக அறிவித்தார்.
இதற்கடுத்து கட்சியின் தலைவராக அறிவிக்கப்பட்டிருந்த பத்மநாபன் என்பவரும் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவிக்க.. இப்போதைக்கு அந்தக் கட்சியின் செயலாளராக அறிவிக்கப்பட்டிருந்த எஸ்.ஏ.சந்திரசேகர் மட்டுமே தனித்து விடப்பட்டிருந்தார்.
இடையில் பல நாட்கள் அப்பாவுக்கும், மகனுக்கும் இடையில் பல சமரசப் பேச்சுக்கள் நடைபெற்று வந்தது இறுதியில் ஒரு தீர்வுக்கு வந்திருக்கிறது.
இதனால், “விஜய் மக்கள் இயக்கத்தை கட்சியாகப் பதிவு செய்ய வேண்டாம்…” என்று எஸ்.ஏ.சந்திரசேகர் தேர்தல் ஆணையத்திற்குக் கடிதம் எழுதியிருக்கிறார்.
ஆக, நடிகர் விஜய்யை வைத்து உருவான ஒரு மாத கால சர்ச்சை சட்டென்று முடிவுக்கு வந்திருக்கிறது.