‘பிகில்’ திரைப்படத்தில் தன்னை இருட்டடிப்பு செய்துள்ளதாக நடிகர் ஆனந்த்ராஜ் குற்றம்சாட்டியுள்ளார்.
இயக்குநர் சித்ரா லட்சுமணனின் ‘சாய் வித் சித்ரா’ நிகழ்ச்சிக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் இதைக் கூறியுள்ளார்.
“ஒரு நடிகருக்கு ஒரு திரைப்படத்தில் அறிமுகக் காட்சி என்பது மிக, மிக முக்கியமானது. அது இல்லையென்றால் அந்தக் கேரக்டர் ரசிகர்களைக் கவராது.
ஆனால், ‘பிகில்’ படத்தில் எனது அறிமுகக் காட்சியை கட் செய்திருந்தார்கள். இத்தனைக்கும் அந்த அறிமுக காட்சியை படமாக்கினோம். அதில் விஜய் தம்பியும் நடித்திருந்தார். எங்களுடன் பலரும் நடித்திருந்தார்கள். இத்தனை பேர் நடித்திருந்தும் அந்தக் காட்சியை நீக்கியிருந்தார்கள்.
அதோடு மேலும் நான் நடித்திருந்த பல காட்சிகள் அந்தப் படத்தில் இல்லை. இதெல்லாம் எனக்கு மிகவும் வருத்தத்தைத் தந்தது. என்னுடைய 35 ஆண்டு கால சினிமா வரலாற்றில் எனக்கு இதுபோல் நடந்ததில்லை.
அந்தப் படத்தை முதல் காட்சியில் பார்த்துவிட்டு பலரும் எனக்கு போன் செய்து.. “என்ன ஸார்.. உங்களோட போர்ஷன் ரொம்பக் கம்மியா இருக்கு”ன்னு வருத்தப்பட்டாங்க. எனக்கு மிகப் பெரிய அதிர்ச்சியாவும் இருந்துச்சு.
இது பற்றி நான் யாரிடமும் புகார் சொல்லவில்லை. விஜய்யிடம்கூட சொல்லவில்லை. விஜய் இந்தப் படத்திற்காக மிகக் கடுமையாக உழைத்தார். அந்த அப்பா கேரக்டருக்காக மிகப் பிரயத்தனம் செய்தார். நிறைய ஹோம்வொர்க் செய்தார். டயலாக் மாடுலேஷனுக்காக நிறைய பயிற்சியெடுத்தார். அதையெல்லாம் பக்கத்துல இருந்து பார்த்தேன்.
என்னுடைய அறிமுகக் காட்சியில் விஜய்யும்தான் நடித்திருந்தார். அதையே படத்துல வைக்கலைன்னா எப்படி..? அதுல எவ்வளவு மேன் பவர் வேஸ்ட்டாயிருக்கு. என்னோட பங்கு மட்டுமில்லை.. விஜய்யோட விலை மதிப்பில்லாத நேரமும் வீணாகியிருக்கு.. அந்தப் படம் பத்தி எனக்குள்ள இருக்குற பெரிய வருத்தம் இதுதான்..!” என்று வருத்தத்துடன் பதிவு செய்திருக்கிறார் நடிகர் ஆனந்த்ராஜ்.