Friday, November 22, 2024

‘மூக்குத்தி அம்மன்’ படத்திற்கு எதிர்ப்பு வலுக்கிறது..!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் கடந்த 12-ம் தேதி வெளியான ‘மூக்குத்தி அம்மன்’ திரைப்படம் பரவலாக நன்றாக இருப்பதாக ரசிகர்களிடத்தில் பெயர் எடுத்திருந்தாலும் இந்து மதத்தை, அதன் நம்பிக்கைகளை.. இந்து சாமியார்களை மட்டும் கிண்டல் செய்வது போல அமைந்திருப்பதால், அந்தப் படத்திற்கு பல திசைகளில் இருந்தும் எதிர்ப்புகளும் கிளம்பியுள்ளன.

படத்தில் ஆர்.ஜே.பாலாஜியின் குல தெய்வமான ‘மூக்குத்தி அம்மன்’ தன்னை வணங்காமல் திருப்பதி சென்று பெருமாளை கும்பிட நினைக்கும் பாலாஜியின் குடும்பத்தினரைக் கண்டிக்கிறார். “இது இந்து மத தெய்வங்களுக்குள் பிரிவினையை ஏற்படுத்தும் முயற்சி..” என்கிறார்கள் இந்து மதப் பற்றாளர்கள்.

“திருப்பதிக்குப் போனால் லட்டு கிடைக்கும்.. பழனிக்குப் போனால் பஞ்சாமிர்தம் கிடைக்கும். இதற்காகத்தான் அங்கே கூட்டம் ஓடுகிறது…” என்று ஒரு வசனத்தை நயன்தாரா பேசுவார். இது அந்தக் கோவில்களுக்குச் செல்லும் உண்மையான பக்தர்களை மிகவும் கேவலப்படுத்துவதாக கொதித்தெழுந்துள்ளனர் பெருமாள் மற்றும் முருக பக்தர்கள்.

அதோடு படத்தில் இடம் பெற்றிருக்கும் ஒரு சாமியார் இந்து மதத்தை வைத்து சட்ட விரோதக் காரியங்களை செய்வது போலவும் “கடவுளுக்கும், பக்தனுக்கும் இடையில் எப்போதும் ஒரு புரோக்கர் தேவையில்லை…” என்று குலதெய்வ சாமி சொல்வது போலவும் படத்தை முடித்திருக்கிறார்கள். இது இந்து மதத்தின் பிரதிநிதிகளாக இருக்கும் சாமியார்களை கேவலைப்படுத்துவதாக உள்ளது என்கிறார்கள் இந்து மத அமைப்புகளின் தலைவர்கள்.

கூடவே, படத்தில் இடம் பெற்றிருந்த கிறித்துவ மோசடி ஜெப கூட்டம் பற்றிய காட்சிகளை வேண்டுமென்று பட வெளியீட்டுக்கு முன்பேயே வெளியிட்டுவிட்டு.. படத்தில் அதை நீக்கம் செய்திருப்பது இயக்குநரின் உள்நோக்கம் சார்ந்த செயல் என்று கொதிக்கிறார்கள் இந்து மத ஆதரவாளர்கள்.

மாற்று மதத்தில் நடக்கும் அக்கிரமங்களையும், அநியாயங்களையும் மட்டும் வெளிச்சத்துக்குக் கொண்டு வராத இந்த சினிமா இந்து மதத்தை மட்டும் கேவலப்படுத்துவது ஏன்..? உண்மையான பக்தர்களாக இருந்தால் அனைத்து மதங்களிலும் இருக்கும் திருட்டுக் கும்பல்களை அடையாளம் காட்ட வேண்டியதுதானே..? ஏன் இந்து மதம் மட்டும்தான் இவர்களுக்குக் கிடைத்ததா…?” என்கிறார்கள்.

அதிலும் நயன்தாரா என்ற கிறிஸ்துவப் பெண்ணை இந்து மதத்தின் குல தெய்வ சாமியாக்கி.. அந்தப் பெண்ணின் மூலமாக இந்து மதத்தின் பிற தெய்வங்களை கிண்டல் செய்திருப்பது ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று…” என்று இந்து மத அமைப்புகளின் தலைவர்கள் குமுறியுள்ளனர்.

சத்குரு ஜக்கி வாசுதேவைஅடையாளப்படுத்தும்விதத்தில் படத்தில் இடம் பெற்றிருக்கும் சாமியார் வேடத்தில் அஜய் கோஷ் நடித்திருக்கிறார். ஜக்கி வாசுதேவின் ஆசிரமம் இருக்கும் இடம் கோவையை அடுத்த ‘வெள்ளியங்கிரி’ மலை. இந்தப் படத்தில் அஜய் கோஷின் ஆசிரமம் அமையும் இடம் ‘வெள்ளிமலை’. ஜக்கி வாசுதேவை பல இடங்களில் கிண்டல் செய்யும் காட்சிகள் படத்தில் இடம் பெற்றுள்ளன.

ஆனால், மனோபாலா நடித்த கிறிஸ்துவ ஜெபக் கூட்டத்தை மட்டும் தயாரிப்பாளர் தரப்பே நீக்கியிருப்பதால் இந்து மதத்தில் இருந்து கொண்டே இந்து மதத்தைக் கிண்டல் செய்திருக்கும் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் மீது கடும் கோபத்தில் இருக்கிறார்கள் இந்து மதத் தலைவர்கள்.

தற்போது ஐசரி கணேஷ் திருப்பதி பெருமாள் கோவிலின் நிர்வாகக் கமிட்டியில் ஒரு உறுப்பினராக இருக்கிறார். “அவர் உறுப்பினராக இருக்கும் கோவிலையே அவர் தயாரிக்கும் படத்தில் எப்படி கிண்டல் செய்யலாம்…? எனவே அவரை அந்தப் பதவியில் இருந்து விலக்க வேண்டும்…” என்று கேட்டு இந்து மத அமைப்புகள் தற்போது போர்க்கொடி தூக்கிவிட்டன.

இனி இதை வைத்துதான் அடுத்தடுத்த நிகழ்வுகள் தமிழ்ச் சினிமாவில் நடைபெறும் என்பதால் திரையுலகம் அடுத்து என்ன நடக்கும் என்று எதிர்பார்த்து ஆவலுடன் காத்திருக்கிறது.

- Advertisement -

Read more

Local News