காமெடி, ஃபேன்டஸி படங்கள் மூலம் கவனிக்க வைத்தவர் இயக்குநர் சிம்புதேவன். அவரது ‘இம்சை அரசன் 23-ம் புலிகேசி’ பலருக்கு ‘ஆல் டைம் பேவரைட்’. சுதந்திரத்துக்கு முந்தைய சில உண்மைச் சம்பவங்களைக் கொண்டு அவர் இப்போது உருவாக்கியுள்ள படம், ‘போட்’. யோகிபாபு கதையின் நாயகனாக நடித்திருக்கும் இதில், கவுரி கிஷன், எம்.எஸ்.பாஸ்கர், சின்னி ஜெயந்த், மதுமிதா, சாம்ஸ் உட்பட பலர் நடித்துள்ளனர். வரும் வெள்ளிக்கிழமை படம் வெளியாகிறது. இப்படம் பற்றி பல சுவாரஸ்யமான தகவல்களை இயக்குனர் பகிர்ந்துள்ளார்.
இந்த படத்தில் காமெடி, ஃபேன்டஸி விஷயங்கள் உள்ளன. இது சர்வைவல் த்ரில்லர் படம். ஜப்பான்காரன் குண்டு போடப்போறான் என்று தெரிந்ததும் உயிர் பிழைக்க ‘போட்’ல் ஒரு குழு ஏறுகிறது. அதில் ஒரு சேட், மலையாளி, தெலுங்குக்காரர், ஆங்கிலேய அதிகாரி என வெவ்வேறு ஆட்கள் இருப்பார்கள். அவர்களுக்குள்ள நடக்கும் உரையாடல்களில் காமெடியும், சீரியஸும் இருக்கும். ஃபேன்டஸி விஷயமும் ஒரு பகுதி இருக்கும். அது ரொம்ப பெருசாக இருக்காது. படத்தில் அந்த சர்பிரைஸை பார்ப்பீங்க.
கடலில் ஷூட் செய்வது கஷ்டம் தான். இந்தப் படத்தின் 90 சதவிகித கதை, கடலில்தான் நடக்கிறது. பீச்சில் கால் நனைக்கிறதுதான் கடல்னு நினைத்திருந்தேன். ஆனால் கடலில் ஷூட் செய்வது கடல் வாழ்க்கை போல ரொம்ப கஷ்டமான விஷயம். அது அற்புதமான இயற்கையாக இருந்தாலும் காத்து, மழை சார்ந்துதான் கடல் வாழ்க்கை இருக்கும். உண்மையாகச் சொல்ல வேண்டுமெனில், மீனவர்களின் வாழ்க்கை ரொம்ப புனிதமானது.
கதை சென்னை சாந்தோமில் நடந்தாலும் திருச்செந்தூர் பக்கம் இருக்கும் உவரியில் ஷூட் செய்தோம். அங்கு அலைகள் அதிகம் இல்லாததால் அந்தப் பகுதியை தேர்வு செய்தோம். ஒரு படகில் ஆர்ட்டிஸ்ட்கள் இருப்பார்கள். இன்னொரு படகிலிருந்து ஷூட் செய்வோம். கேமராமேன் மாதேஷ் மாணிக்கம் கேமராவை ஃபோகஸ் செய்யும்போது திடீரென்று ஒரு அலை வந்து நடிகர்கள் இருக்கும் படகை மேலே தூக்கிவிடும். ஒரு நாள் சூரிய ஒளி பிரம்மாதமாக இருக்கும். சூப்பர் என்று நினைத்தால், அன்னைக்கு ஆர்ட்டிஸ்ட்கள் இருக்கமாட்டார்கள். எல்லா நடிகர்களும் இருக்கும் அன்னைக்கு மேகம் முழுசாக சூரியனை மறைத்து விடும். 50 நாள் கடலில் ஷூட் செய்தோம். அது ரொம்ப சவாலானது, என்றார்.