விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ‘பத்தா’ திரைப்படம், கனடாவில் நடைபெற்ற இந்திய திரைப்பட விழா ஆல்பெர்டாவில் இரண்டு முக்கிய அங்கீகாரங்களைப் பெற்றுள்ளது. பாலாஜி தரணிதரன் இயக்கிய இப்படத்தில் விஜய் சேதுபதியுடன் லிஜோமோலும் நடித்திருந்தார். குறிப்பாக, படத்தில் சிறுவனாக நடித்த சாய் பிருத்விராஜின் நடிப்பு பார்வையாளர்களிடையே பெரும் கவனத்தைப் பெற்றது.

திரையரங்குகளில் வெளியானபோது நல்ல வரவேற்பைப் பெற்ற இப்படம், ரூ.35 கோடிக்கும் அதிகமாக வசூலித்ததாகக் கூறப்படுகிறது. தொடர்ந்து, அக்டோபர் 29-ம் தேதி நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் டிஜிட்டல் வெளியீடு கண்டது. தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளிலும் இப்படம் வெளியிடப்பட்டது.
இந்நிலையில், கனடாவில் நடைபெற்ற இந்திய திரைப்பட விழா ஆல்பெர்டாவில் ‘பத்தா’ படத்துக்குச் சிறந்த திரைப்படத்துக்கான விருது வழங்கப்பட்டுள்ளது. இந்தத் தகவலைப் படத்தின் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும், படத்தில் தனது நடிப்பால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த சிறுவன் சாய் பிருத்விராஜுக்கு சிறந்த நடிகருக்கான சிறப்பு அங்கீகார விருதும் கிடைத்துள்ளது. இதன்மூலம் ஒரே திரைப்படம் இரண்டு விருதுகளைப் பெற்று படக்குழுவினருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
