மம்முட்டியின் மகன் என்ற அடையாளத்தைத் தாண்டி, வித்தியாசமான கதைகளைத் தேர்வு செய்து தனக்கென தனி ரசிகர் வட்டத்தை உருவாக்கியவர் துல்கர் சல்மான். ‘வாயை மூடி பேசவும்’, ‘ஓகே கண்மணி’ உள்ளிட்ட படங்கள் மூலம் தமிழ் ரசிகர்களிடமும் பிரபலமான இவர், சமீபத்தில் வெளியான ‘லக்கி பாஸ்கர்’ படத்தின் மூலம் ரூ.100 கோடிக்கும் அதிகமான வசூலைப் பதிவு செய்தார். தென்னிந்திய மொழிகளில் இவரது படங்களுக்கு தொடர்ந்து வரவேற்பு கிடைத்து வருகிறது.
இந்த நிலையில், துல்கர் சல்மான் நடிக்கும் புதிய திரைப்படமான ‘ஆகாசம்லோ ஒக தாரா’வின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. பவன் சடிநேனி இயக்கும் இப்படத்தின் மூலம் சாத்விகா வீரவல்லி கதாநாயகியாக அறிமுகமாகிறார். அவரது கதாபாத்திரத்தை அறிமுகப்படுத்தும் வீடியோவும் சமீபத்தில் வெளியிடப்பட்டது.
கீதா ஆர்ட்ஸ், ஸ்வப்னா சினிமாஸ் மற்றும் லைட் பாக்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் படத்தை வெளியிடத் திட்டமிட்டுள்ளனர். கடந்த ஆண்டு ஜூலை 28-ம் தேதி ஃபர்ஸ்ட் லுக் வெளியான நிலையில், படத்தின் முதல் பாடலான ‘மிட்டாய் மழை’ சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. பாலாஜி வேணுகோபால் எழுதிய பாடலை ரம்யா பெஹரா பாடியுள்ளார். படத்தின் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ‘ஆகாசம்லோ ஒக தாரா’ திரைப்படம் நவம்பர் 20-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
