நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் கடந்த டிசம்பர் மாதம் காலமானார். அவரை வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் கோட் படத்தில் ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நடிக்க வைத்திருக்கிறார்கள். அதேபோல், விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன் நடித்து வரும் படைத்தலைவன் மற்றும் விஜய் ஆண்டனி நடித்துள்ள மழை பிடிக்காத மனிதன் போன்ற படங்களிலும் இதே தொழில்நுட்பத்தில் விஜயகாந்தை நடிக்க வைத்திருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் விஜயகாந்தின் தேமுதிக கட்சி இன்றைய தினம் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், தமிழ் திரையுலகத்தைச் சேர்ந்த அனைவருக்கும் அன்பான வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. விஜயகாந்த்தை ஏஐ தொழில்நுட்பத்தின் மூலம் திரைப்படங்களில் பயன்படுத்தி இருப்பதாக செய்திகள் வருகிறது. இதுபோன்ற செய்திகள் ஆடியோ வெளியீட்டு விழாக்களிலும் வெளியாகின்றன. எங்களிடம் முன் அனுமதி இல்லாமல் இது மாதிரியான அறிவிப்புகள் வருவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
ஏஐ தொழில்நுட்பத்தின் மூலம் விஜயகாந்தை திரைப்படங்களில் பயன்படுத்தியிருப்பதாக இதுவரை யாரும் எங்களிடம் அனுமதி பெறவில்லை என்பதை நாங்கள் தெரிவிக்கிறோம். எனவே, அனுமதி இல்லாமல் பத்திரிக்கை செய்திகள், ஊடக செய்திகள், ஆடியோ வெளியீட்டு விழா போன்ற நிகழ்ச்சிகளில் இது தொடர்பான தகவல்களை வெளியிடுவதை தவிர்க்க வேண்டும் என்று தேமுதிக அறிவுறுத்தியுள்ளது.