இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் “கூலி” படத்தின் படப்பிடிப்பு தற்போது விஜயவாடாவில் நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிகர்கள் சத்யராஜ் மற்றும் ஷோபனா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் ரஜினியுடன் இணைந்து நடிக்கின்றனர். இந்நிலையில், பிரபல கன்னட இயக்குநரும் நடிகருமான உபேந்திராவும் இந்த படத்தில் நடிப்பதற்காக அண்மையில் இணைந்துள்ளார்.
உபேந்திரா, இதற்கு முன்பு, 2008ஆம் ஆண்டு வெளியான விஷால் நடித்த “சத்யம்” என்ற ஒரே ஒரு தமிழ் படத்தில் மட்டுமே நடித்திருந்தார். கன்னடத்தில் வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை இயக்கி, முன்னணி ஹீரோக்கள் பலரும் நடிக்க தயங்கியபோது, தானே கதாநாயகனாக நடித்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தியவர் உபேந்திரா.
அவரது 2010ஆம் ஆண்டு வெளிவந்த “சூப்பர்” திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அப்போது, ரஜினிகாந்த் இந்த படத்தை பாராட்டி, “இயக்குநர் உபேந்திரா வித்யாசமாக யோசிப்பது போல இந்தியாவில் வேறு யாரும் யோசிக்க மாட்டார்கள். அவர் தனது படங்களுக்கு புதிய வடிவத்தை கொண்டு வந்து விடுவார். நான் அவரை இயக்குநராக மிகவும் ரசிக்கிறேன். அவர் தனது படங்களில் நடித்துக் கொண்டே இயக்குநராகவும் செயல்பட வேண்டும்” என்று கூறினார்.
அப்போது, உபேந்திரா, ஒரு நல்ல கதை வைத்திருந்தால் அதை என்னிடம் சொல்ல விரும்பினால் நிச்சயமாக இருவரும் இணைந்து பணியாற்ற வாய்ப்பு இருக்கிறது என்று கூறியிருந்தார் ரஜினிகாந்த். அந்த விருப்பம் இப்போது 14 வருடங்கள் கழித்து, ஒரு நடிகராக தனது படத்தில் உபேந்திராவை இணைத்ததன் மூலம் நிறைவேறியுள்ளது.