விஜய் சேதுபதி தற்போது நித்திலன் இயக்கத்தில் ‘மகாராஜா’ படத்தில் நடித்துள்ளார், இது ஜூன் 14 அன்று வெளியாகவுள்ளது. படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. சில நாட்களுக்கு முன் துபாயில் உள்ள புர்ஜ் கலீஃபாவில் ‘மகாராஜா’ படத்தின் போஸ்டர் திரையிடப்பட்டது. இது தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் வெளியாகவுள்ளது.

இந்நிலையில், விஜய் சேதுபதி சமீபத்திய பேட்டியில், “மகாராஜா எனக்கு 50வது படமாக அமைந்தது மகிழ்ச்சி. சினிமாவில் எல்லோரிடம் இருந்தும் ஒவ்வொரு விஷயத்தையும் கற்றுக் கொண்டுள்ளேன். விமர்சனம் மற்றும் பாராட்டுகளை சமமாகவே பார்க்கிறேன்.

சினிமாவுக்கு வருவதற்கு முன்னால் துபாயில் வேலை பார்த்தேன். பல வருடங்களுக்கு பிறகு துபாயில் புர்ஜ் கலிபாவில் எனது படத்தின் போஸ்டர் வந்த போது, ஜெயிக்க வேண்டும் என்ற நினைவு தான் வந்தது.
பல படங்களில் நடித்த பிறகும் ஒரு நடிகனாக எனக்கு நிறைவு ஏற்படவில்லை. மக்கள் செல்வன் என்று அழைக்கும் போது கேட்க நன்றாக இருக்கிறது. 50 படங்களில் நடித்துள்ளேன், ஆனால் பல படங்களுக்கு முழுமையான சம்பளம் இன்னும் வரவில்லை. ஆனாலும் தயாரிப்பாளர்கள் படம் எடுக்க வருவதை வரவேற்கிறேன். விரைவில் படம் இயக்கலாம் என்ற எண்ணத்தில் இருக்கிறேன் இயக்க போகிறேன்,” என்றார்.