“வாழை” திரைப்படத்தை பிரபல இயக்குநர் ஷங்கர் பாராட்டியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், இனி எனக்கு வாழைப்பழங்களை பார்க்கும்போதெல்லாம் தலையில் வாழைத்தார்கள் சுமந்து செல்லும் இந்த கதையின் மாந்தர்கள்தான் நினைவுக்கு வருவார்கள் எனக் குறிப்பிட்டுள்ளார்.
வாழைப்பழம் இனி முந்தையதைப் போல இனிக்குமா என்றும் தெரியவில்லை. இது ஒரு யதார்த்த சினிமா, அதனுள் அழகியல், உணர்வுகள் அனைத்தும் சிறப்பாக உள்ளன. இயக்குநர் மாரி செல்வராஜுக்கும், படக்குழுவினருக்கும் வாழ்த்துக்கள் என வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கிய “வாழை” திரைப்படம் கடந்த வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படத்திற்கு விமர்சகர்களிடமிருந்து நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. குறிப்பாக, இயக்குநர் பாலா உள்ளிட்ட பிரபலங்கள் பலர் படத்தை பாராட்டிய நிலையில், தற்போது இயக்குநர் சங்கரும் படத்தை பாராட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது.