இரா சரவணன் இயக்கத்தில் சசிகுமார் நடித்துள்ள படம் “நந்தன்”. இந்த படம் வரும் 20ம் தேதி வெளியிடப்பட இருக்கிறது. இப்படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. அப்போது இயக்குநர் இரா சரவணன் பேசுகையில், இந்த படத்தின் கதையை எழுதும்போது, வேறு சில ஹீரோக்களை மனதில் கொண்டு எழுதினேன். அவர்களை தேடிக்கொண்டே சென்றேன். ஆனால், நாம் நினைப்பது போலவே யாரும் கிடைப்பது இல்லை. அதே சமயம் எப்போதும் எனக்கு அண்ணனாகவும், முதுகெலும்பாகவும் இருந்து வரும் சசிகுமார், ‘நான் செய்கிறேன் வா’ என்று அழைத்து, படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார். அவரின் அந்த பெருந்தன்மை யாருக்குமே கிடைக்காது.
ஆனால், என்னை நம்பி வந்த சசிகுமாரை நான் எவ்வளவு மரியாதையாக நடத்த வேண்டும் என்பது எனக்கு தெரிந்திருந்தும், அப்படியே நடந்து கொள்ளவில்லை. அவருக்கு இனிமேல் நான் உதவியே செய்யக்கூடாது என நினைக்கும் அளவுக்கு கொடுமைப்படுத்தினேன். குறிப்பாக படப்பிடிப்பின் கடைசி சில நாட்களில் அவரை பாடாய்படுத்தினேன். மக்களின் கூட்டத்திற்குள் நிறுத்தி அடிபடவைத்தேன். அந்த கதாபாத்திரமாக அவர் முழுமையாக மாறி, தனது உயிரையே கொடுத்து நடித்தார். உண்மைக்கும் துளி குறையாமல் படத்தை எடுக்க வேண்டும் என்பதற்காகவே நான் அவ்வாறு நடத்தினேன் என்று அவர் கூறினார்.
படத்தின் இரண்டாவது கதாநாயகனாக பாலாஜி சக்திவேல் நடித்துள்ளார். அவர் குறித்து பேசும்போது, “சார், இந்த படத்தில் நீங்கள் தான் நாயகன்” என்று சொன்னேன். படத்தின் முதல் பாடலும் அவருக்காகவே வைத்திருக்கிறேன். எந்த ஒரு நிலையிலும், எந்த ஒரு சூழலிலும், சிரித்த முகத்துடன் நிதானமாக இருக்க வேண்டும் என்ற மிகச்சிறந்த பண்பை அவரிடம் இருந்து நான் கற்றுக்கொண்டேன்” என்று இயக்குநர் இரா சரவணன் பேசினார்.