Tuesday, November 19, 2024

நடிகர் டேனியல் பாலாஜி மாரடைப்பால் மரணம்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தமிழ் சினிமாவில் ஒரு முக்கியமான வில்லன் நடிகராக வலம் வந்த டேனியல் பாலாஜி நேற்று மாரடைப்பால் காலமானார்.

மறைந்த நடிகர் முரளியின் சித்தி மகனான டேனியல் பாலாஜி சிறுவயதிலிருந்தே நடிப்பின் மீது கொண்ட ஆர்வமாக சினிமாவில் பணிபுரியவே ஆசைப்பட்டார். தரமணியில் உள்ள அரசு திரைப்படக் கல்லூரியில் சேர்ந்து நடிப்பு, இயக்கம் ஆகியவற்றில் பயிற்சி பெற்றவர் கமல்ஹாசன் நடித்த ‘மருதநாயகம்’ படத்தில் வேலை செய்ய வேண்டும் என்கிற ஆர்வம் காரணமாக அந்தப் படத்தில் உதவி மேனேஜராக பணியாற்றினார்.

முரளி நடித்த ‘காமராசு’ படத்தில் உதவி இயக்குநராக நாஞ்சில் சி அன்பழகனிடம் பணியாற்றியவர், ராதிகா நடித்து மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற ‘சித்தி’ தொடரில் நடிக்க வாய்ப்பு கிடைத்து டேனியல் என்கிற பாத்திரத்தின் மூலம் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். அதன் பிறகு டேனியல் பாலாஜி என்றே அழைக்கப்பட்டார்.

சுந்தர் கே.விஜயன் இயக்கிய ‘அலைகள்’ தொடரிலும் தொடர்ந்து நடித்தவர் முதல் முறையாக ஸ்ரீகாந்த் நடித்த ‘ஏப்ரல் மாதத்தில்’ படத்தில் சுரேஷ் என்கிற பாத்திரத்தில் நடித்து திரையுலகில் நடிகராக அறிமுகமானார்.

தனுஷ் நடித்த ‘காதல் கொண்டேன்’ படத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டராக ஒரு சிறிய வேடத்தில் நடித்தவர் ‘காக்க காக்க’ படத்தில் சூர்யாவுடன் மோதும் டெரர் வில்லனாக நடித்து தனது நடிப்பின் மூலம் கவனிக்க வைத்தார்.

தொடர்து கௌதம் மேனன் இயக்கிய ‘வேட்டையாடு விளையா’டு படத்தில் கமலுடன் மோதும் அமுதன் சுகுமாரன் என்ற வில்லனாக நடித்தார். வெற்றிமாறன் இயக்குனராக அறிமுகமான ‘பொல்லாதவன்’ படத்தில் கிஷோரின் தம்பியாக மிரட்டலான வில்லன் வேடத்தில் நடித்து தனுஷுடன் முதியவர், தனுஷுடன் ‘வடசென்னை’, விஜய்யுடன் ‘பைரவா’, ‘பிகில்’ என தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய நான்கு மொழிகளில் நாற்பதுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

‘ஞான கிறுக்கன்’ என்கிற படத்தில் கதாநாயகனாகவும் நடித்தவர், சென்னை ஆவடியில் ஶ்ரீ ரக்தூள் அங்காள பரமேஸ்வரி என்ற அம்மன் ஆலயம் ஒன்றையும் கட்டியுள்ளார்.

நெஞ்சுவலி காரணமாக கொட்டிவாக்கத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு வயது 48

பாலாஜியின் கண்கள் தானம் செய்யப்பட்டு, அஞ்சலிக்காக சென்னை புரசைவாக்கம் வரதம்மாள் காலனியில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.

திரையுலகினரும் நண்பர்களும் பொதுமக்களும் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

- Advertisement -

Read more

Local News