6
Tax exemption if title in Tamil! perarasu
ASW கிரியேஷன்ஸ் மற்றும் JSJ சினிமாஸ் சார்பில் தயாரிப்பாளர்கள் ஹென்றி டேவிட் மற்றும் ஜஸ்டின் விஜய் ஆகியோர் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஸ்ட்ரைக்கர்’.
ஜஸ்டின் விஜய் கதாநாயகனாக நடிக்க, கதாநாயகியாக வித்யா பிரதீப் நடித்துள்ளார். முக்கிய வேடங்களில் ராபர்ட் மாஸ்டர், கஸ்தூரி, அபிநயாஸ்ரீ உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இந்தப் படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் படக் குழுவினருடன் இயக்குநர்கள் சுசீந்திரன், பேரரசு, சக்தி பிலிம் பேக்டரி சக்திவேலன், நடிகர் இமான் அண்ணாச்சி, பாரதமாதா மணிமாறன், நடிகர் ஆர்.எஸ் கார்த்திக், விஜய் டிவி புகழ் நவீன் உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வில் இயக்குநர் பேரரசு பேசும்போது, “இப்படத்தின் நாயகன் ஜஸ்டின் நிச்சயமாக ஒரு முன்னணி ஹீரோவாக வருவார்.
இந்தப் படத்தில் ஒரு பாடலில் ராபர்ட் மாஸ்டரின் நடிப்பை பார்த்தபோது இவருடன் இணைந்து நடிக்கும் ஹீரோக்கள் உஷாராக இருக்க வேண்டும் என்று சொல்ல தோன்றுகிறது” என்று வாழ்த்தினார்.
மேலும் அவர் பேசும்போது, “கலைஞர் கருணாநிதி காலத்தில் தமிழில் டைட்டில் வைத்தால் வரி விலக்கு உண்டு என்கிற ஒரு சட்டத்தை கொண்டு வந்தார். அப்போது வெளியான அனைத்து படங்களுமே தமிழில் டைட்டில் வைத்து வெளியாகின. அஜித்தின் ‘காட்பாதர்’ படம்கூட ‘வரலாறு’ என்று பெயர் மாற்றி வெளியானது. ஆனால் இப்போது பல படங்களுக்கு ஆங்கிலத்தில்தான் டைட்டில் வைக்கிறார்கள். நான்கூட இந்தப் படத்தின் ‘ஸ்ட்ரைக்கர்’ என்கிற டைட்டிலை பார்த்ததுமே போராளி என்கிற படமாக இருக்குமோ என்று நினைத்து விட்டேன். அதனால் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் தமிழ்ப் படங்களுக்கு தமிழில் டைட்டில் வைக்க வேண்டும் என்கிற சட்டத்தை மீண்டும் கொண்டு வர வேண்டும்.
தமிழகம், தமிழ்நாடு என்று சொன்னால் மட்டும் தமிழ் வாழ்ந்து விடாது.. அதை வாழ வைக்க வேண்டும்.” என்றார்.