“16 வயதினிலே” படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான பாரதிராஜா தயாரிப்பாளரான முதல் திரைப்படம் “புதிய வார்ப்புகள்”. அதற்கு வித்திட்டவர் பாரதிராஜாவின் காட்பாதரான கேஆர்ஜி. பாரதிராஜாவிடம் “நீ சொந்தப் படம் எடு”என்று அவர் சொன்னபோது “நானா சொந்தப் படமா?” என்று அதிர்ச்சியோடு அவரிடம் கேள்வி கேட்டவர்தான் பாரதிராஜா.
“படம் எடுக்க வேண்டுமென்றால் அதற்கு எக்கச்சக்கமாக பணம் வேண்டுமே.. அது என்கிட்ட எங்க இருக்கு..?” என்று பாரதிராஜா கேட்டபோது, “நீ உன் பெயரைப் போட்டு ஒரு கால் பக்கம் தினத்தந்தி பத்திரிகையில் விளம்பரம் கொடு. அப்புறம் என்ன நடக்குதுன்னு பாரு..?” என்று அவருக்கு அறிவுரை கூறியதோடு நிற்காமல், தன் கையில் இருந்து 5,000 ரூபாயை பாரதிராஜாவிடம் கொடுத்த கே.ஆர்.ஜி. “இதை வைத்துக்கொண்டு படத்துக்கு முதல்ல பூஜை போடு” என்றார்.
அப்படி ஆரம்பிக்கப்பட்ட திரைப்படம்தான் பாக்யராஜ் கதாநாயகனாக அறிமுகமான “புதிய வார்ப்புகள்” திரைப்படம். அந்தப் படத்தில்தான் ரதி அக்னிஹோத்ரி கதாநாயகியாக அறிமுகமானார்.
சிம்புவின் தாயான உஷா ராஜேந்தரை ‘கிழக்கே போகும் ரயில்’ படத்தில் அறிமுகப்படுத்திய பாரதிராஜா ‘புதிய வார்ப்புகள்’ படத்தில் முக்கியமான ஒரு பாத்திரத்தில் நடிக்கின்ற வாய்ப்பை உஷாவுக்கு வழங்கினார்.
உஷாவின் நடிப்பாற்றலைப் பற்றி குறிப்பிடும் போது”அந்தப் படத்தில் இடம் பெற்றிருந்த ஒரு உணர்ச்சிமயமான காட்சியில் நடிப்பில் பின்னி எடுத்துவிட்டார் உஷா…” என்று சமீபத்தில் ஒரு நேர்காணலில் பகிர்ந்து கொண்டிருக்கிறார் பாரதிராஜா.