ரஜினிகாந்த் நடித்த ‘எஜமான்’, விஜயகாந்த் நடித்த ‘சின்னக்கவுண்டர்’, கார்த்திக் நடித்த ‘வருஷம் 16’, பிரபு நடித்த ‘ராஜகுமாரன்’ உட்பட பல வெற்றிப் படங்களை இயக்கியவர் இயக்குநர் ஆர்.வி.உதயகுமார். இயக்குநர் சங்க தலைவராகவும் பதவி வகித்து வரும் அவர், ரஜினிகாந்த் படத்தால் நஷ்டம் அடைந்த தகவலை நேற்று நடந்த ராமராஜனின் ‘சாமான்யன்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசும் போது தெரிவித்தார்.

“நடிகர் ராமராஜனின் மனம் எப்படி இருக்கிறதோ அதேபோன்று இயல்பான ஒரு நடிகர் ராமராஜன். ராமராஜனை என்னால் இயக்க முடியாமல் போய்விட்டதே என்கிற வருத்தம் எனக்கு இருக்கிறது.
நான் படம் இயக்கிய சமயத்தில் எதிர்பாராத விதமாக ஒரு விநியோகஸ்தராக ரஜினியின் ‘தர்மத்தின் தலைவன்’ படத்தை வாங்கியிருந்தேன். ஆனால், சில காரணங்களால் அது தள்ளிப்போனது. அப்போது ராம நாராயணன் என்னிடம் அதற்கு பதிலாக ராமராஜன் படம் ஒன்றை தருகிறேன், அதை ரிலீஸ் செய்யுங்கள் என்று கூறினார்.
ரஜினி படத்திற்கு பதிலாக ராமராஜன் படத்தை ரிலீஸ் செய்வதா என்கிற யோசனை ஏற்பட்டது. அதனால், அந்தப் படத்தை என்னால் வாங்க முடியவில்லை. அந்த படம் தான் ‘கரகாட்டக்காரன்’. கிட்டத்தட்ட பல கோடி ரூபாய் வரை அந்த படம் வசூலித்தது. ஆனால், ரஜினி படத்தை வாங்கி வெளியிட்ட வகையில் எனக்கு மிகப்பெரிய நட்டம் ஏற்பட்டது.
ராமராஜன் மனது பூவை விட மென்மையானது. உண்மையிலேயே இவர்தான் சின்ன மக்கள் திலகம். தான் நேசித்தவர்களை எல்லாம் தயாரிப்பாளர்களாக மாற்ற முயற்சித்து அதில் வெற்றி பெற்றவர் ராமராஜன்” என்று பேசினார்