Touring Talkies
100% Cinema

Tuesday, September 9, 2025

Touring Talkies

பாரதிராஜாவின் உலக சாதனை

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

இயக்குனர் இமயம்” என்று ரசிகர்கள் கொண்டாடும் பாரதிராஜா எப்படிப்பட்ட படைப்பாளி என்பதை தமிழ் ரசிகர்கள் நன்கு அறிவார்கள். ஆனால் இதுவரை உலக சினிமா வரலாற்றில் எந்த இயக்குனரும்  செய்யாத, செய்யத் துணியாத ஒரு சாதனையை அனாயாசமாகச்  செய்தவர் அவர் என்பதை பலர் அறிந்திருக்க வாய்ப்பில்லை.

நான் பத்திரிகையாளனாக பணியாற்றிக் கொண்டிருந்த போதுதான்  எனக்கும் இயக்குனர் பாரதிராஜாவிற்கும் முதல் முதலாக அறிமுகம் ஏற்பட்டது. படப்பிடிப்பு தளங்களில் செய்தி சேகரிக்கச் செல்லும்போது நான் அவரை அடிக்கடி சந்தித்துப் பேசுவேன். அப்போதே அவரிடம் ஒரு பொறி இருந்ததை என்னால் உணர முடிந்தது என்றாலும் தமிழ்த்திரையுலகின் போக்கையே ஒரு கால கட்டத்தில் மாற்றக் கூடிய திறன் படைத்தவர் அவர் என்பது அப்போது எனக்குத் தெரியாது.

 கே. ஆர். ஜி.  தயாரித்த படங்கள் பலவற்றில் பாரதிராஜா அப்போது உதவி இயக்குனராகப் பணியாற்றிக் கொண்டிருந்தார்.  கே. ஆர். ஜியின் படங்களுக்கு   நான் பத்திரிகைத் தொடர்பாளராக   பணியாற்றிக் கொண்டிருந்ததால்  அந்த  அலுவலகத்தில்   பாரதிராஜாவும் நானும்  அடிக்கடி சந்தித்துப் பேசிக் கொள்வது வழக்கம்.  

அப்போது கே. ஆர். ஜியின் அலுவலகம் தியாகராய நகரில் அமைந்திருந்தது. நாங்கள் இருவரும் அங்கிருந்து பனகல் பார்க் வரை நடந்து வந்து அங்கேதான் பஸ் ஏறுவோம்.  ஒரு நாள் பனகல் பார்க்கில் நின்று கொண்டிருந்தபோது “மயிலு” என்ற பெயரில்  ஒரு கதையைச்  சொன்னார் அவர். “ரொம்பவும்  வித்தியாசமாக இருக்கிறது” என்று அந்தக் கதையை நான்  பாராட்டினேன்.

அந்தச்  சம்பவம் நடந்து மூன்று மாதங்களுக்குப் பின்னர் ஒரு நாள்  “மயிலு” கதையைப் படமாக்க எஸ். ஏ. ராஜ்கண்ணு என்ற  தயாரிப்பாளர் முன்வந்திருக்கும் மகிழ்ச்சியான செய்தியை என்னிடம் அவர் பகிர்ந்து கொண்டார். 

அப்போது கமல்ஹாசனுக்கும் எனக்கும் இருந்த  நெருக்கம் அவருக்கு நன்றாகத் தெரியும்.அது  தவிர கே. ஆர். ஜி. தயாரித்த “ஆயிரத்தில் ஒருத்தி” என்ற திரைப்படத்திற்காக  சமபளத்தைப் பேசி கமல்ஹாசனனை ஒப்பந்தம் செய்தது நான்தான் என்ற விவரமும் அவருக்குத் தெரியும் என்பதால் அப்போது “16 வயதினிலே” என்று பெயர் மாற்றம் பெற்றிருந்த “மயிலு” படத்தில்  கதாநாயகனாக நடிக்க கமல்ஹாசனைப் பார்த்து பேசுவதற்காக நானும் பாரதிராஜாவும்தான்  அருணாச்சலம் ஸ்டுடியோவிற்கு சென்றோம். “மயிலு” படத்தின் கதை கமல்ஹாசனுக்கு முன்பே தெரியும் என்பதால் அந்தப் படத்திலே நடிக்க எந்த மறுப்பும் சொல்லாமல் அவர்   ஒப்புக்கொண்டார்.

கமல்ஹாசன் -ஸ்ரீதேவி ஜோடியாக நடிக்க “16 வயதினிலே”  படத்தின் படப்பிடிப்பு சிவசமுத்திரத்தை ஒட்டி அமைந்துள்ள கிரமங்களில்   நடைபெற்றபோது படப்பிடிப்பைப்  பார்ப்பதற்காக சென்னையிலிருந்து சில பத்திரிகையாளர்களை நான் சிவசமுத்திரத்திற்கு அழைத்துச் சென்றேன்.

அங்கே பத்திரிகையாளர்கள் மத்தியிலே பாரதிராஜாவை அறிமுகப்படுத்தி  பேசிய  தயாரிப்பாளர் எஸ். ஏ. ராஜ்கண்ணு “இவரை சாதாரணமான ஒரு  டைரக்டர் என்று நினைக்காதீர்கள். இன்று மிகவும் பிரபலமாக உள்ள பாலச்சந்தருக்கு  சவால் விடக் கூடிய ஒரு இயக்குனர் இவர் ” என்று பாரதிராஜாவை பாராட்டிப் பேசினார்..  

அன்று அவர் சொன்ன அந்த வார்த்தைகள் ஒவ்வொன்றும் உண்மை என்பதை  தனது அற்புதமான படைப்புகள்  மூலம்  தொடர்ந்து பாரதிராஜா நிரூபித்தது எல்லோரும் அறிந்த ஒரு விஷயம் .

அந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்ததும் “செந்தூரப் பூவே” பாடல் காட்சியையும் மற்றும் சில காட்சிகளையும் எனக்கு எடிட்டிங் அறையில் போட்டுக் காண்பித்தார் பாரதிராஜா.அந்த பாடல் காட்சிகள்  பிரமிப்பின் எல்லைக்கே என்னை அழைத்துச் சென்றன. . அந்த பாடல் காட்சிகளை மிகவும் புதுமையான கோணங்களில் அற்புதமாகப்  படமாக்கியிருந்தார் அவர்.

பாடல்களைப் பார்த்துவிட்டு அவரிடம் பேசிக் கொண்டிருக்கும்போது “நான் படம் எடுத்தால் அதற்கு நீங்கள்தான் டைரக்டர்” என்று அவரிடம் கூறினேன்.

அதற்குப் பிறகு “16 வயதினிலே” படம் வெளிவந்து  எப்படிப்பட்ட சாதனைகளை செய்தது என்பதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள். அந்த படத்தை  அடுத்து   “கிழக்கே போகும் ரயில்” படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தபோது பாரதிராஜாவிடம் ஐயாயிரம் ரூபாயை   முன்பணமாகக் கொடுத்துவிட்டு ” நீங்கள் எனக்காக ஒரு படம் இயக்கித் தர வேண்டும்” என்றேன்.

“முழுவதும்  புதுமுகங்களை வச்சி நான் இப்போ எடுத்துக்கிட்டிருக்கிற “கிழக்கே போகும் ரயில்” படத்தின் ரிசல்டைப்  பார்த்துவிட்டு அதைப்பற்றி முடிவெடுப்போம்” என்றார் அவர்.

“அந்தப்படம் வெற்றி பெற்றாலும் வெற்றி பெறவில்லை என்றாலும் நீங்கள்தான் டைரக்டர்”என்று சொல்லிவிட்டு அவரிடம் பணத்தைக் கொடுத்தேன்.

“கிழக்கே போகும் ரயில்”படம்  ஒரு வருடம் ஓடி மிகப் பெரிய சாதனையைப் படைத்ததும்  கே. ஆர். ஜிக்காக “சிகப்பு ரோஜாக்கள்” படத்தை இயக்கிய அவர் அடுத்து மனோஜ் கிரியேஷன்ஸ் என்ற பெயரில் சொந்தமாக பட நிறுவனம் ஒன்றை ஆரம்பித்து “புதிய வார்ப்புகள்” என்ற படத்தை எடுத்தார்.அந்தப்படத்தில்தான் கே பாக்யராஜ் கதாநாயகனாக அறிமுகமானார்.        அந்த நான்குபடங்களுமே மிகப்பெரிய வெற்றிப்படங்களாக அமைந்தன   

அந்த படங்களைத் தொடர்ந்து பாரதிராஜா இயக்கிய  “நிறம் மாறாத பூக்கள்” படமும் வெள்ளிவிழா கண்டதையடுத்து தொடர்ந்து ஐந்து வெற்றிப்படங்களைக் கொடுத்த முதல் தமிழ்ப்பட  இயக்குனர் என்ற பெருமையைப்  பெற்றார் பாரதிராஜா. 

இதற்கிடையில் கார்த்திக்- ராதா இருவரும் அறிமுகமான “அலைகள் ஓய்வதில்லை” படத்தில் பாரதிராஜாவிடம் நான் உதவி இயக்குனராக சேர்கின்ற ஒரு சூழ்நிலை உருவானது.அந்தப் படத்திற்குப் பிறகு பாரதிராஜாவின் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த “டிக் டிக் டிக்”உருவானது.

இப்படி மொத்தம் பத்து படங்களை இயக்கிய பின்னர் எனது பட நிறுவனமான காயத்ரி பிலிம்ஸ்க்காக பாரதிராஜா இயக்கிய படம்தான்  “மண்வாசனை”.

அந்தப்படத்தில்தான்  கின்னஸ் சாதனைகளையெல்லாம் தாண்டி  ஒரு இமாலய சாதனையைச்  செய்தார் பாரதிராஜா

“மண்வாசனை” படத்திற்காக மொத்தம் நாற்பது நாட்கள் நடிகை ராதாவின் கால்ஷீட்டை நான் வாங்கி வைத்திருந்தேன்…அதனால்தான்  அந்த படத்தின் தொடக்கவிழா அழைப்பிதழில் கூட அவரது படம் இடம் பெற்றிருந்தது அவருக்கு ஜோடியாக சிவகுமாரை நடிக்க வைக்கலாம் என்பது என்னுடைய எண்ணமாக இருந்தது. .ஆனால் பாடல் பதிவிற்கு பின்னாலே  மொத்தமாக புதுமுகங்களைப் போட்டு அந்தப் படத்தை எடுக்கலாம் என்று முடிவு செய்தார் பாரதிராஜா.

நளினி  

“மண்வாசனை” படத்திலே  கதாநாயகியாக நடிக்க  நாங்கள் முதலில் தேர்ந்தெடுத்தது பத்மினியின் உறவுக்கார பெண்ணான ஷோபனாவை. அவரைப்பார்த்து பேசி படத்திலே நடிக்க அவர் ஒப்புக்கொண்ட பின்னர் அதைப்பற்றிய செய்தியை பத்திரிகைகளில் அறிவித்து விட்டு  பாரதிராஜாவும் நானும் “அலைகள் ஓய்வதில்லை” படத்தின் இந்திப் பதிப்பான “லவ்வர்ஸ்”படத்தின் படப் பிடிப்பிற்காக   பம்பாய் சென்று விட்டோம்.  நான் அந்த படத்திலே  உதவி இயக்குனராகப் பணியாற்றிக் கொண்டிருந்தேன்

நாங்கள் இந்திப்படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை வருவதற்குள் அப்போது  பிளஸ்டூ படித்துக் கொண்டிருந்த ஷோபனா படத்தில்  நடித்தால் தன்னுடைய படிப்பு பாதிக்கப்படும் என்று  ஒரு காரணத்தைச் சொல்லிவிட்டு  அந்தப்படத்திலிருந்து  விலகிக் கொண்டார். பின்னர் அந்த இடத்திற்கு வந்த ரேவதியும் பிளஸ் டூ மாணவிதான் என்பது வேறு விஷயம்

கதாநாயகி ரேவதி என்பதை முடிவு செய்தவுடன் அடுத்து  நாங்கள் கதாநாயகனைத் தேடத் தொடங்கினோம். இரண்டு மாதங்கள் தொடர்ந்து நாங்கள் கதாநாயகன் வேட்டையில் ஈடுபட்டும் கதாநாயகன் கிடைத்தபாடில்லை.

இதற்கிடையில் 1983 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 12 ஆம் தேதி தேனீ அருகே அமைந்துள்ள வீரபாண்டியில்  படப்பிடிப்பை தொடங்க முடிவு செய்த பாரதிராஜா மதுரைக்கு போய்  அங்குள்ள கல்லூரி ஏதாவது ஒன்றில் கதாநாயகனைத் தேடிக் கொள்ளலாம் என்றார். அதற்கு நானும்  “சரி” என்று ஒப்புக் கொண்டேன்

ரேவதி,வினு சக்ரவர்த்தி, காந்திமதி, ஓய்.விஜயா விஜயன் உட்பட பல நடிகர் நடிகைகளும் தொழில் நுணுக்கக் கலைஞர்களுமாக ஏறக்கறைய எண்பது பேர் நேராக போடி நாயக்கனூர் சென்று விட பாரதிராஜா, கதாசிரியர் கலைமணி நான் ஆகிய மூவரும்  கதாநாயகனைத் தேடி  மதுரைக்குப்  புறப்பட்டோம்

முப்பது நாட்கள் தொடர்ந்து படப்பிடிப்பு நடத்த அரிசி பருப்பு என்று மளிகை சாமான்கள் உட்பட  எல்லாவற்றையும்  வாங்கிக் கொண்டு பத்து சமையல்காரர்களையும் கூட்டிக் கொண்டு  படப்பிடிப்பிற்கு என்பது பேர் புறப்பட்டு விட்டனர்

ஆனால் படத்தில் நாயகனாக நடிக்க வேண்டியவர் அன்றுவரை தேர்வு செய்யப்படவில்லை

தமிழ் சினிமா வரலாற்றில் மட்டுமின்றி உலக சினிமா வரலாற்றில்  அதுவரை நடைபெறாத  ஒரு அதிசயமாக   அமைந்தது அந்த நிகழ்ச்சி

மதுரைக்கு போன நாங்கள் கல்லூரி கல்லூரியாக தேடியதுதான் மிச்சம். நாயகனுக்குரிய தோற்றத்துடன பாரதிராஜாவின் எதிர்பார்ப்பை ஈடு செய்கின்ற மாதிரி ஒரு பையனும் கிடைக்கவில்லை

சோர்ந்துபோன நான் “மீனாட்சி கோவிலுக்கு போய் சாமி கும்பிட்டு வந்து அப்புறம்  தேட ஆரம்பிப்போம்” என்று கூறி பாரதிராஜாவை அழைத்துக் கொண்டு கோவிலுக்குப் போனேன்.

சாமி கும்பிட்டு விட்டு நாங்கள் காரில் ஏறியபோது ஒரு பையன் டைரக்டருக்கு கை கொடுப்பதற்காக காருக்கு வெளியே தடுமாறிக் கொண்டிருந்தான்.அவனையே பார்த்துக் கொண்டிருந்த அவர் “அவனைக் காரில்  ஏத்திக்க” என்று என்னிடம் சொன்னார்.

மதுரைக்கு அருகே அமைந்திருந்த தேனிதான் பாரதிராஜாவின் சொந்த ஊர் என்பதால் அவன் அவரது ஊரைச் சேர்ந்த பையனாக இருப்பான் போலிருக்கிறது  என்று எண்ணியபடியே  அவனை காரில் ஏற்றிக் கொண்டேன்

பின்னர் ஒரு மெஸ்ஸில் சாப்பிட்டுவிட்டு நாங்கள் தங்கியிருந்த ஹோட்டலுக்குப் போனோம்.

அந்த பையனைப் பார்த்து “சிரி” என்றார்.

அவன் சிரித்தான்.

“முறை” என்றார்.

அவன் முறைத்தான்.

அடுத்தபடியாக என்னைப் பார்த்து “நல்லாயிருக்கான்யா இவனையே ஹிரோவாகப் போட்டுவிடலாம்” என்றார்

அந்தப் பையனின் பெயர் பாண்டியன்

மீனாட்சி அம்மன் கோவில் பக்கத்தில் அப்போது வளையல் கடை வைத்திருந்த  அந்த வாலிபன்தான்  மண்வாசனையில் நாயகனாக அறிமுகமானான். பல ஊர்களில் வெள்ளிவிழா கொண்டாடிய அந்தப்படம்  மதுரையில் 231 நாட்கள் ஒடி சாதனை படைத்தது 

அதற்குப் பிறகு பாண்டியன் ஏறக்குறைய  எழுபத்தி ஐந்து படங்களில் முப்பதுக்கும் மேற்பட்ட நாயகிகளுக்கு ஜோடியாக நடித்தான்

உலக சினிமா வரலாற்றில் இப்படி ஒரு அதிசயம் நடந்திருக்கிறதா என்றால்  இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்

அப்படி ஒரு ஒப்பற்ற சாதனையை  நிகழ்த்த  பாரதிராஜாவிற்குத் துணையாக நின்றது  அவரது உழைப்பும் தன்னம்பிக்கையும்தான்.

- Advertisement -

Read more

Local News