நடிகர் விஜய் நடித்த “கோட்” திரைப்படம் இன்று வெளியாகியுள்ள நிலையில், நடிகர் அஜித் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வாழ்த்துத் தெரிவித்த செய்தியை “கோட்” படத்தின் இயக்குநர் வெங்கட் பிரபு தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழகம் தொடங்கிய பிறகு விஜய் நடிப்பில் வெளிவந்த முதல் படம் என்பதால், “கோட்” மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. நடிகர்கள் ஜெயராம், பிரபுதேவா, மோகன், பிரசாந்த், வைபவ், சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். உலகம் முழுவதும் 5,000-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் இப்படம் வெளியானது.
இந்த நிலையில், “நடிகர் விஜய்க்கு முதல் ஆளாக வாழ்த்து தெரிவித்த எனது அஜித் அண்ணாவுக்கு நன்றி,” என்று வெங்கட் பிரபு எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், ரசிகர்களுக்கு செய்தி பகிர்ந்துள்ள அவர், “கோட்” திரைப்படத்தை பார்க்க முன், நீங்கள் வேறு எந்த திரைப்படமும் பார்க்கத் தேவையில்லை. சாதாரணமாக வந்து படத்தை கொண்டாடுங்கள், தளபதியை கொண்டாடுங்கள்,” என குறிப்பிட்டுள்ளார்.