அட்டக்கத்தி, பீட்சா, சூதுகவ்வும், தெகிடி, முண்டாசுப்பட்டி உட்பட பல படங்களை தயாரித்தவர் சி.வி.குமார். மாயவன், கேங்ஸ் ஆப் மெட்ராஸ், கொற்றவன் போன்ற படங்களை இயக்கி இருக்கும் அவர், தற்போது ‘சூதுகவ்வும்’ படத்தின் இரண்டாம் பாகத்தை தயாரித்திருக்கிறார்.

மிர்ச்சி சிவா, ஹரீஷா, வாகை சந்திரசேகர், எம்.எஸ்.பாஸ்கர், அருள்தாஸ் உட்பட பலர் நடித்துள்ள சூதுகவ்வும் இரண்டாம் பாகத்தை அர்ஜுன் எம்.எஸ். என்பவர் இயக்கி உள்ளார். இவர் பிரபுதேவா நடித்த ‘யங் மங் சங்’ படத்தை இயக்கியவர். இந்தப் படம் மே மாதம் வெளியாக உள்ளது.
‘சூதுகவ்வும்’ இரண்டாம் பாகம் படத்தை தொடர்ந்து ‘சூது கவ்வும்’ மூன்றாம் பாகத்தை எடுக்க இருப்பதாகவும், அதில் ‘சூதுகவ்வும்’ முதல் பாகத்தில் நடித்த விஜய்சேதுபதி நடிக்க இருப்பதாகவும் தயாரிப்பாளர் சி.வி.குமார் தெரிவித்திருக்கிறார்.
“சூதுகவ்வும் மூன்றாம் பாகமாக ‘தர்மம் வெல்லும்’ படம் உருவாகிறது. இதில் விஜய்சேதுபதியை நடிக்க கேட்டிருக்கிறேன். ஸ்கிரிப்ட் முழுவதையும் முடித்துவிட்டு அவரை வந்து பார்க்க சொல்லியிருக்கிறார்” என்று ஒரு பேட்டியில் சி.வி.குமார் தெரிவித்துள்ளார்.