இசைஞானி இளையராஜா பயோபிக் படமாக உருவாகவுள்ளது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு நேற்று வெளியானது. தமிழ் சினிமா உலகினராலும், ரசிகர்களாலும் இசைஞானி என கொண்டாடப்படும் இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு படமாக உருவாகவுள்ளது இசை காதலர்கள் மத்தியில் மிகப்பெரிய கொண்டாட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.
இளையராஜாவாக தனுஷ் நடிக்கவுள்ள இசைஞானியின் பயோபிக் குறித்த துவக்க விழா நேற்று நடந்தது நிலையில் இதில் இளையராஜா, தனுஷுடன் உலக நாயகன் கமல், இயக்குனர்கள் பாரதிராஜா, வெற்றிமாறன் உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர். இசைஞானியின் தீவிர ரசிகரான தனுஷ், இளையராஜாவாக நடிக்கவுள்ளது ரசிகர்கள் மத்தியில் எக்கச்சக்கமான எதிர்பார்பினை கிளப்பியுள்ளது.
இதைத்தொடர்ந்து இந்த பயோபிக் திரைப்பட துவக்க விழாவில் பலர் கலந்து கொண்ட நிலையில் எதிர்பார்க்கப்பட்ட முக்கிய பிரபலங்களோ கலந்துக்கொள்ளாமல் போனது ஆச்சிரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக இளையராஜாவின் குருக்களில் ஒருவரான டி.வி.கோபாலகிருஷ்ணன் மற்றும் இளையராஜாவின் முதல் திரைப்படமான அன்னக்கிளி திரைப்படத்தின் கதையாசிரியர் ஆர்.செல்வராஜ், அத்திரைப்படத்தின் கதாநாயகன் சிவகுமார் அதேபோல் அத்திரைப்படத்தின் தயாரிப்பாளர் சுப்பு பஞ்சு, இளையராஜாவின் மூத்த மகன் கார்த்திக் ராஜா மற்றும் இளையராஜாவின் இளைய மகன் யுவன் சங்கர் ராஜா ஆகியோர் கலந்துகொள்ளவில்லை.இவர்கள் அனைவரும் இளையராஜாவின் வாழ்க்கை பயணத்தில் முக்கிய பங்கு வகித்தவர்களும் வகிப்பவர்களும் ஆவர் என்பது குறிப்பிடத்தக்கது.