இசைஞானி இளையராஜா, மொசார்ட் உள்ளிட்ட மேற்கத்திய இசை ஜாம்பவான்களின் சிம்பொனி இசைக் கூறுகளை தனது பாடல்களில் இணைத்து, பாமர மக்களும் ரசிக்கும் வகையில் மெட்டுகளை உருவாக்கினார். அவரது இசையின் மாயாஜாலம் காரணமாக பல திரைப்படங்கள் வெற்றிப் படங்களாக மாறியுள்ளன. மேலும், இன்றைய தலைமுறையையும் ஈர்க்கும் தன்மை கொண்டவை என அவரது பாடல்கள் அமைந்துள்ளன.

சமீபத்தில், லண்டனில் ‘வேலியண்ட்’ (Valiant) சிம்பொனியை அரங்கேற்றி, இன்னொரு முக்கிய சாதனையை இளையராஜா புரிந்துள்ளார். இளையராஜாவின் அரை நூற்றாண்டு கால திரை இசைப் பயணத்தை சிறப்பாக கொண்டாட தமிழ்நாடு அரசு முடிவு செய்திருப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடி, இளையராஜாவை நேரில் அழைத்து, அவருக்கு வாழ்த்து தெரிவித்தார். அவருடைய சாதனையை பாராட்டும் வகையில் அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
நேற்று, இசைஞானி இளையராஜாவை நேரில் சந்தித்து, நடிகர் சிவகுமார், அவரின் மகன் நடிகர் சூர்யா மற்றும் மகள் பிருந்தா ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர். இந்நிலையில், இயக்குநர்கள் ஆர்.வி. உதயகுமார், பி.வாசு, கே.எஸ்.ரவிக்குமார், பேரரசு மற்றும் ஆர்.கே.செல்வமணி ஆகியோரும் நேரில் சந்தித்து, இளையராஜாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.