சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ‘ரெட்ரோ’ திரைப்படம் மே 1ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள இந்த படத்தில் பூஜா ஹெக்டே மற்றும் ஜோஜு ஜார்ஜ் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் ப்ரோமோஷன் பணிகளுக்காக படக்குழுவினர் பல்வேறு இடங்களுக்கு சுற்றுப்பயணம் செய்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக நேற்று ‘ரெட்ரோ’ படக்குழுவினர் மும்பைக்கு சென்றனர்.
அங்கு நடைபெற்ற நிகழ்வில் பேசும் போது சூர்யா, “சினிமா துறையில் ஒவ்வொரு காலத்திலும் புதுமையை உருவாக்கக்கூடியவர்களின் தேவை எப்போதும் இருக்கும். யாராவது வந்து புதியதை உருவாக்கி விடுவார்கள். அப்படிப்பட்ட ஒருவர் தான் கார்த்திக் சுப்புராஜ். திரைக்கதை, பார்வை (visuals) எல்லாவற்றிலும் அவர் வித்தியாசத்தை கொண்டு வந்திருக்கிறார். அவர் உருவாக்கும் கதாபாத்திரங்கள் எப்போதும் அவர் எழுதிய தனிப்பட்ட பாணியில் தான் இயங்கும். அவர் எதையும் செய்யலாம்; என்ன செய்யப் போகிறார் என்று கணிக்க முடியாது. ஒவ்வொரு காட்சியின் முடிவிலும் படப்பிடிப்பை தயார் செய்வோம்.
அந்த நேரத்தில் புதிய கோணத்தில் எதையாவது செய்து ஆச்சரியப்படுத்த, நடிகர்களை சவாலுக்கு உள்ளாக்குவார். அந்த சவாலை எதிர்கொள்ள நாங்களும் தயாராக இருக்க வேண்டும்,” என்றார். மேலும் அவர், “நான் என் பள்ளி மற்றும் கல்லூரி நாட்களில் நிறைய அனுபவங்களை கற்றுக் கொண்டேன். லயோலா கல்லூரியில் பி.காம் படிப்பு முடித்தேன். அங்கிருந்து தான் என் பயணம் தொடங்கியது. இங்கு அதிகமாக வர வாய்ப்பு கிடைக்கவில்லை. இருந்தாலும் இவ்வளவு அன்பும் ஆதரவும் அளிக்கிறீர்கள். யாரு சாமி நீங்களெல்லாம்!” என மிகுந்த உற்சாகத்துடன் தெரிவித்தார்.