திரையுலகில் நடிப்புக்கு இலக்கணமாக இந்தவர் சிவாஜி. சிறு வயது முதலே நாடகங்களில் நடித்து பராசக்தி திரைப்படம் மூலம் சினிமாவில் நாயகனாக அறிமுகமானார். முதல் படத்திலேயே சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்தார்.
சிவாஜி ஏற்று நடிக்காத கதாபாத்திரங்களே இல்லை என்று சொல்லும் அளவுக்கு வாழ்ந்து காட்டியவர். அந்த கதாபாத்திரமாகவே மாறி நடிப்பை தாண்டி கதையாகவே வாழ்ந்தவர் எனக் கூறலாம். அதனால்தான் ரசிகர்கள் அவரை நடிகர் திலகம் என அழைத்தனர்.r
ஆனால், அப்படிப்பட்ட ஒரு சிறந்த நடிகரை நீ நடிக்க வேண்டாம். சும்மா நின்னால் போதும் என்று சொல்லியிருக்கிறார் இயக்குனர் ஒருவர். தமிழ், தெலுங்கு மொழி திரைப்படங்களை இயக்கியவர் எல்.வி.பிரசாத். கல்யாணம் பண்ணி பார், ராணி, பூங்கோதை, மனோகரா, மிசியம்மா, மங்கையத் திலகம், பாக்கியவதி, இருவர் உள்ளம் உள்ளிட்ட பல திரைப்படங்களை இயக்கியுள்ளார்.
இருவர் உள்ளம் படத்தை பிரசாத் இயக்கியபோது சிவாஜியும், சரோஜாதேவியும் நடிக்க வேண்டிய ஒரு காட்சியை எடுக்க வேண்டியிருந்தது. அப்போது சிவாஜியை அழைத்த பிரசாத் ‘கணேசன்.. இந்த காட்சியில் சரோஜாதேவியின் நடிப்பு மட்டுமே ரசிகர்களுக்கு தெரிய வேண்டும். அப்போதுதான் அது திரைக்கதைக்கு வலு சேர்க்கும் எனவே, இந்த காட்சியில் நீங்கள் உங்கள் நடிப்பைக் காட்ட வேண்டாம். சும்மா நின்றால் போதும்’ என சொல்லியிருக்கிறார்.
சிவாஜியும் அப்படியே நின்று இருக்கிறார். இதுபற்றி ஒரு முறை பேசிய சிவாஜி ‘எனக்கு நடிப்பு சொல்லிக் கொடுத்தவர்கள் முக்கியமானவர் எல்.வி.பிரசாத். அடிப்படை நடிப்பை அவர்தான் எனக்கு சொல்லிக் கொடுத்தார். ஒரு காட்சி சிறப்பாக வர நடிக்காமலும் இருக்க வேண்டும். ஒரு நடிகன் அதையும் செய்ய வேண்டும் புரிய வைத்தவர். நடிக்காமல் இருப்பதும் ஒரு நடிப்புதான் எனக்கு அவர்தான் சொல்லி கொடுத்தார்’ என சிவாஜி ஒரு நிகழ்ச்சி ஒன்றில் எல்.வி.பிரசாத்தை பாராட்டி பேசியிருந்தார்.