Thursday, April 11, 2024

எண்ணித் துணிக – சினிமா விமர்சனம்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

ஐ.டி. துறையில் பணியாற்றும் நாயகனான கதிர் என்னும் ஜெய் தனது கல்லூரி தோழியான நர்மதாவை தற்செயலாக சந்திக்கிறார். கல்லூரியில் படிக்கும்போது தன்னால் ஒரு சிக்கலில் மாட்டிக் கொண்டு கல்லூரியில் இருந்து வெளியேறிய நர்மதா மீது கதிருக்கு ஒரு காதல் இருக்கிறது. இந்தக் காதலை வளர்த்தெடுக்க அவர் நினைக்கிறார்.

இன்னொரு பக்கம் நர்மதா சுற்றுச் சூழல், மது ஒழிப்பு போன்ற சமூகப் பிரச்சினைகளுக்காக களத்தில் இறங்கிப் போராடும் பெண்ணாகவும் இருக்கிறார். ஆனாலும் ஜெய்யின் உண்மையான காதலைப் புரிந்து கொண்டு கல்யாணத்துக்கு சம்மதிக்கிறார் அதுல்யா.

இந்த நேரத்தில் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்செல்ஸ் நகரத்தில் இருக்கும் சர்வதேச நகைக் கடத்தல் கும்பலின் தலைவன் 2000 கோடி மதிப்புள்ள 10 வைரக் கற்களை பறிகொடுத்துவிட்டான். இந்த வைரக் கற்கள் தற்போது தமிழ்நாட்டில் மாநில அமைச்சராக இருக்கும் சுனில் ரெட்டியிடம் இருப்பதாகத் தெரிய வருகிறது.

சுனில் ரெட்டியோ அந்த வைர நகைகளை அவரது பினாமி நடத்தும் நகைக்கடையில் பத்திரமாக வைத்திருக்கிறார். இந்தத் தகவலும் அந்த சர்வதேச கொள்ளையருக்குத் தெரிகிறது. உடனேயே சென்னையில் இருக்கும் வம்சி கிருஷ்ணாவின் தலைமையில் ஒரு டீமை அமைத்து அந்த நகைக்கடையைக் கொள்ளையடித்து வைரக் கற்களை கொண்டு வரும்படி சொல்கிறார்.

இந்த கொள்ளையர் டீம் நகைக் கடைக்குள் வரும்போது அங்கே தனது கல்யாணத்திற்கு நகை வாங்குவதற்காக அதுல்யாவும் வந்திருக்கிறார். அதேபோல் தனது குழந்தையின் மருத்துவ சிகிச்சைக்காக தனது நகையை விற்க வந்திருக்கிறார் இன்னொரு நாயகியான அஞ்சலி நாயர்.

நகைக் கடையில் நடக்கும் கொள்ளையடிப்பு சம்பவத்தில் அதுல்யாவும், அஞ்சலி நாயரின் கணவரும் கொல்லப்படுகிறார்கள். அஞ்சலி நாயர் துப்பாக்கிக் குண்டு பாய்ந்தும் உயிர் பிழைக்கிறார்.

இவர் உயிர் பிழைத்தால் மட்டுமே கொள்ளையர்கள் பற்றிய முழு தகவலும் தெரிய வரும் என்பதால் இவரை தனியார் மருத்துவமனைக்கு தூக்கிச் சென்று சிகிச்சையளிக்கிறார் அமைச்சர் சுனில் ரெட்டி.

இன்னொரு பக்கம் போலீஸை நம்பினால் இதில் எதுவும் நடக்காது என்று நி்னைக்கும் ஜெய் தானே இந்த வழக்கில் துப்பறிய இறங்குகிறார். அமைச்சர் ஒரு பக்கம் தனது வைரக் கற்களுக்காக மல்லுக்கட்ட.. உயிர் பிழைக்கும் அஞ்சலி நாயர் தனது குழந்தையைக் காப்பாற்ற நினைக்க.. தனது காதலியை கொன்றவனை பழி வாங்க ஜெய் துடிக்க.. யாருடைய எண்ணம் நிறைவேறியது என்பதுதான் இந்த ‘எண்ணித் துணிக’ படத்தின் திரைக்கதை.

‘எண்ணித் துணிக’ என்ற இப்படத்தின் தலைப்பு திருக்குறளிலிருந்து எடுக்கப்பட்டதாகும். எண்ணித் துணிக கர்மம் துணிந்தபின் எண்ணுவம் என்பது இழுக்கு…’ என்ற அற்புதமான குறளை மையப்படுத்திய படம் இது,  

ஒரு செயலில் ஈடுபடத் தொடங்கும் முன் அது குறித்து எத்தனை முறை வேண்டுமானல் சிந்திக்கலாம். ஆனால் முடிவெடுத்துவிட்டால் எக்காரணத்தை முன்னிட்டும் அதிலிருந்து பின் வாங்கக் கூடாது என்பதை அழுத்தமாகச் சொல்கிறது இந்தக் குறள்.

இதை மையப்படுத்திதான் இப்படத்தின் கதாநாயகன் கதிரின் கதாப்பாத்திரம் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

இதுவரையிலும் எளிதான காதல் நாயகனாகவே நடிக்க வைக்கப்பட்டிருந்த நடிகர் ஜெய்க்கு இந்தப் படத்தில் முழு நீள ஆக்சனை கொடுத்து ஆக்சன் ஹீரோவாக்கியிருக்கிறார்கள்.

ஜெய் தனது வழக்கமான நடிப்பையே பதிவு செய்திருக்கிறார். சண்டை காட்சிகளில் வேகத்தைக் காட்டியிருக்கிறார். காதல் காட்சிகளில் ரசிக்க வைக்கிறார். சிரிக்கவும், காதலிக்கவும் வரும் அவரது முகம் சோகத்திற்கும், கோபத்திற்கும் மட்டுமே ஒத்துழைக்க மறுக்கிறது.

வில்லனாக நடித்திருக்கும் வம்சி கிருஷ்ணாவின் நடிப்பு பார்வையாளர்களை ஈர்க்கிறது. இன்னும் வித்தியாசமான வில்லனாக இவரைக் காட்டியிருக்கலாம். அதுல்யா காதல் காட்சிகளுக்காகவும், டூயட் பாடலுக்காகவும் படத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கிறார்.

வித்யா பிரதீப் வில்லி கதாபாத்திரத்தில் தனது உருண்ட விழிகளை உருட்டியே நடித்திருக்கிறார். அஞ்சலி நாயர் சென்டிமெண்ட் காட்சிகள் முழுவதிலும் தனது ஆளுமையைக் காட்டி படத்தின் பெரும் பாரத்தை தானே சுமந்திருக்கிறார்.

திருட்டு அமைச்சராக சுனில் ரெட்டி தனது டயலாக் டெலிவரியில் பின்னியெடுத்திருக்கிறார். போலீஸ் உயரதிகாரியை அவர் வார்த்தைகளால் படுத்தும்பாடு உச்சக்கட்ட கேவலம். வில்லத்தனம் கலந்த நகைச்சுவையான நடிப்பில் இறுதியில் அவர் ஈர்க்கிறார்.

பாசமான அப்பாவாக மாரிமுத்துவும், கண்டிப்பான அப்பாவாக கோபி கண்ணதாசனும் தத்தமது கேரக்டர் ஸ்கெட்ச்சுக்கேற்ற நடிப்பைக் காண்பித்திருக்கிறார்கள்.

சாம் சி.எஸ் பின்னணி இசையில் அடித்து ஆடியிருக்கிறார் என்றாலும் பாடலுக்கான இசை அவ்வளவு ஈர்ப்பாக இல்லை. குர்டிஸ் ஆண்டனின் ஒளிப்பதிவு காட்சிகளுக்கு உயிர் கொடுத்திருக்கிறது.

‘ஒரு அப்பனுக்கு பொறந்திருந்தா?’ என்ற வசனத்தை இன்னும் எத்தனை வருடத்திற்குத்தான் தமிழ்ச் சினிமாவில் கேட்பது. இதற்கொரு எண்ட் கார்டு போடக் கூடாதா..? மற்றபடி அமைச்சர் சுனில் ரெட்டி பேசும் பல வசனங்கள் புத்திசாலித்தனமாக, கோர்வையாக, கதைக்கு உதவுவதைப் போலவே இருக்கிறது.

படத்தின் முதல் பாதியை எடுத்துக் கொண்டால், நகைகளை கொள்ளையடிக்கும் காட்சி விறுவிறுப்புடனே நடக்கிறது. ஆனாலும், அந்த நகைக்கடை இருக்கும் சாலைகளில் சிசிடிவி கேமிராவே இல்லையா..? அதை வைத்து கண்டறியலாமே..? இதை மட்டும் திரைக்கதையாசிரியர் தன் வசதிக்காக சொல்லாமலேயே மறைத்துவிட்டார்.

இடைவேளைக்குப் பின்புதான் படத்தின் திரைக்கதை வேகமெடுக்கிறது. முதல் பாதியை ஒப்பிடும்போது, இரண்டாம் பாதி சற்று ஆறுதலைத் தருகிறது. இடைவேளைக்குப் பின்பு டிவிஸ்ட் மேல் டிவிஸ்ட்டாக திரைக்கதை பறந்து கொண்டே போவதால் படம் இடைவேளைக்குப் பின்புதான் அதிக அலப்பறையாக இருக்கிறது.

கடைசியாக அந்த வைரக் கற்களை வைத்தே வில்லனின் கதையை முடிக்கும் திரைக்கதைக்கு ஒரு ஸ்பெஷல் பாராட்டு..!

மொத்தத்தில் இந்த ‘எண்ணி்த் துணிக’ படத்தைப் பார்க்கலாம்தான்…!

RATING : 3.5 / 5

- Advertisement -

Read more

Local News