Thursday, April 11, 2024

விட்னஸ் – சினிமா விமர்சனம்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தி பீப்பிள் மீடியா பேக்டரி’ என்ற பேனரின் கீழ் இந்தப் படத்தைத் தயாரிப்பாளர் டி.ஜி.விஷ்வபிரசாத் தயாரித்துள்ளார். இவருடன் இணைந்து விவேக் குச்சிபோட்லா இந்தப் படத்தை இணை தயாரிப்பு செய்திருக்கிறார்.

ஷ்ரத்தா ்ரீநாத், ரோகிணி, அழகம் பெருமாள், சண்முகராஜா, ஜி. செல்வா, சுபத்ரா ராபர்ட், இராஜீவ் ஆனந்த் மற்றும் எம்.ஏ.கே.இராம் மற்றும் பலர் இதில் நடித்துள்ளனர். 

இத்திரைப்படத்தை இயக்கி, ஒளிப்பதிவு செய்திருப்பவர் தீபக். திரைக்கதை எழுதியவர்கள் முத்துவேல் மற்றும் ஜே.பி.சாணக்யா. படத் தொகுப்பு செய்திருப்பவர் பிலோமின் ராஜ். இசையமைப்பு செய்திருப்பவர் இரமேஷ் தமிழ்மணி.

நாம் தினம்தோறும் கண்டும், காணாது, கடந்து போகும் சமூகத்தில் அடிமட்டத்தில் வாழும் தூய்மைப் பணியாளர்களின் வாழ்வைப் பேசுகிற படம் இது.

தூய்மைப் பணியாளர்களின் உலகத்தை மையமாகக் கொண்டிருக்கும் இந்த ‘விட்னஸ்’ திரைப்படம், பெருநகரங்கள் குறித்து நாம் இதுவரை கண்டிராத உண்மைகளையும், கண்ணுக்குப் புலப்படாத வகையில் அங்கே செயல்படும் அதிகார மையங்களையும் நமக்கு வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறது.

மாநகராட்சியில் துப்புரவு தொழிலாளியாக இருக்கிறார் ரோகிணி. கணவரை இழந்த நிலையில் ஒரே மகனான பார்த்திபனை நன்றாகப் படிக்க வைத்து பெரிய அதிகாரியாக்க வேண்டும் என்று நினைத்து மகனுக்காகவே வாழ்ந்து வருகிறார் ரோகிணி.

இந்த நேரத்தில் பணக்காரர்களும், அதிகாரிகளும் வாழும் ஒரு அப்பார்மெண்டில் செப்டிக் டேங்கில் அடைப்பு ஏற்படுகிறது. ஒரு சந்தர்ப்பத்தில்  ரோகிணியின் மகனான பார்த்திபனை அந்த மலக் குழிக்குள்  இறங்கச் சொல்கிறார்கள். மறுக்கும் பார்த்திபன் வலுக்கட்டாயமாக இறக்கிவிடப்படுகிறான். குழிக்குள் இறங்கிய பார்த்திபன் விஷ வாயு தாக்கி இறந்துவிட ரோகிணியின் ஒட்டு மொத்தக் கனவும் உடைகிறது.

தன் மகனுக்கு வந்த நிலை வேறு எவருக்கும் வரக் கூடாது என நினைக்கும் ரோகிணி கம்யூனிஸ்ட் தோழர்களோடு நின்று தனது மகன் மரணத்திற்கு நீதி கேட்டு நீதிப் போராட்டம் நடத்துகிறார்.

பெத்தராஜூ என்ற தொழிற் சங்கத் தலைவர், அவருக்கு உறுதுணையாக வருகிறார். இன்னொருபுறம், பார்வதி என்ற இளம் கட்டடக் கலைஞர் ரோகிணியிடம் முக்கியமான சில ஆதாரங்களை ஒப்படைக்கிறாள். அந்த ஆதாரங்களைக் கொண்டு பெத்தராஜுவும், இந்திராணியும், நீதிமன்றத்தை நாடுகின்றனர்.

அதன் விளைவாக, சம்பவம் நடந்த பகுதியின் கழிவு நீர்ப் பணி ஒப்பந்ததாரருக்கு கடுமையான பாதிப்பு ஏற்படுகிறது. இதற்கான பதிலடியாக, இந்திராணியின் வாழ்விலும், பார்வதியின் வாழ்விலும், பெத்தராஜுவின் வாழ்விலும் கடுமையான பாதிப்புகள் ஏற்படுகின்றன.  அந்த வழக்கு என்ன ஆனது.. ரோகிணிக்கு நீதி கிடைத்ததா..? என்பதுதான் மீதிக் கதை.

ரோகிணியின் கேரியரில் மிக முக்கியமான படம் இது. ஒவ்வொரு காட்சியிலும் அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். நடை, உடை, பேச்சு என கடை நிலை தூய்மைப் பணியாளராகவே மாறி, இந்திராணி’ என்ற கதாபாத்திரத்தில் வாழ்ந்திருக்கிறார் ரோகிணி.

மகனை இழந்து கதறுவது, மகனது மரணத்துக்கு நீதி கேட்டுப் போராடுவது, தன்னை தரக்குறைவாக நடத்தும் சூப்பர்வைசரிடம் கோபத்தைக் காட்டும் போதும், சம்பளம் தர மறுப்பதையெதிர்த்து  கொந்தளிப்பதுமாய் சில காட்சிகளில் அவரின் நடிப்புதான் படத்திற்குக் கிடைத்திருக்கும் பெரும் பலம்.

அதே அடுக்கு மாடி குடியிருப்புவாசிகளில் ஒருவராக இருக்கும் ஷ்ரத்தா ஸ்ரீநாத் தனக்கு நீச்சல் கற்றுக் கொடுத்த பார்த்திபனுக்கு நீதி கிடைக்க ரோகிணியுடன் இணைந்து போராடுகிறார். அந்தப் போராட்டக் களத்தில் தனது நடிப்பை கெத்தாக செய்திருக்கிறார் ஷ்ரத்தா..!

அரசு அதிகாரியாக அழகம் பெருமாள், வழக்கறிஞராக சண்முகராஜன், தொழிற் சங்கத் தலைவராக வருகிறவர்… அத்தனைப் பேரின் நடிப்பும் கச்சிதம்!

கதையின் முதன்மைப் பாத்திரத்தில் பார்த்திபனாக நடித்திருக்கும் இளைஞன் ஜி.செல்வாவின் இயல்பான நடிப்பும் ஈர்க்கிறது. நீதிமன்ற காட்சிகளில் பங்கு பெற்ற அனைவருமே எதார்த்தத்தை மீறாமல் நடித்துள்ளனர்

ரமேஷ் தமிழ்மணியின் இசையில் ‘பறவையாய் நாம் பறக்கிறோம்’ பாடல் மனதுக்கு இதமாக இருக்கிறது..! பின்னணி இசை இப்படத்திற்கு பெரியளவில் ஒத்துழைப்பை கொடுத்துள்ளது. படத்தை எழுதி இயக்கியிருக்கும் தீபக்தான் ஒளிப்பதிவும் செய்துள்ளார். தன் எழுத்தைத் தானே சரியாக காட்சிப்படுத்தியுள்ளார்.

படத்தில் ஆங்காங்கே பட்ஜெட் சிக்கனம் தெரிகிறது. இது விட்னஸுக்கு சின்ன மைனஸ்தான். என்றாலும், அதிகார வர்க்கத்தின் சமநிலை தவறினால் அவர்கள் கையில் எடுக்கும் வன்முறைகள் மிகப் பயங்கரமானதாக இருக்கும் என்பதை அழுத்தமாகப் பதிய வைத்ததில் கவனிக்க வைக்கிறார் இயக்குநர் தீபக்.

மனிதரின் மலத்தை மனிதரே அல்லும் அவலத்திற்கு அரசு தடை விதித்திருந்தாலும், இப்போதும் மலக்குழிகளில் அப்பாவி மனிதர்கள் இறக்கப்பட்டு மாண்டு போகும் சம்பவங்கள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. இதற்கு அரசுகள்தான் முதல் காரணம் என்பதை மிக அழுத்தமாக சொல்லியிருக்கும் இயக்குநர் தீபக், அரசுகள் இதில் இரட்டை நிலையை எடுத்து நாடகமாடுவதையும் வெளிப்படையாகக் குற்றம் சாட்டியிருக்கிறார்.

நீதித் துறை மூலமாகப் போராடினால்கூட இறுதியில் வெற்றி பெறப் போவது அரசுகள்தான் என்பதை பட்டவர்த்தனமாய் உடைத்திருக்கிறார் இயக்குநர். படத்தின் கிளைமாக்ஸ் காட்சிக்காகவே தமிழ் சினிமாவில் இனி எல்லாக் காலங்களிலும் இந்தப் படம் பேசப்படும் என்பதில் சந்தேகமில்லை.

RATING : 4 / 5

- Advertisement -

Read more

Local News