மலையாள சினிமாவின் சூப்பர் ஸ்டார்களில் ஒருவரான ‘மெகா ஸ்டார்’ மம்மூட்டியின் 50 வருட திரையுலக வாழ்க்கையைப் பாராட்டி கேரள அரசு அவருக்கு பாராட்டு விழாவை நடத்த முன் வந்துள்ளது.
மலையாள சூப்பர் ஸ்டார் நடிகர்களில் ஒருவரான மம்மூட்டி திரையுலகத்தில் காலடி வைத்து 50 வருடங்களாகிவிட்டது. 5 நாட்களுக்கு முன்பாகத்தான் அவர் இதை அறிவித்தார். இதையொட்டி மலையாளத் திரையுலகம் என்றில்லை இந்தியா முழுவதிலும் இருக்கும் அனைத்து திரைப்பட கலைஞர்களுக்கு அவருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நேரத்தில் மம்மூட்டியின் 50 வருட கால கலையுலக சேவையைப் பாராட்டி கேரள அரசு விழா எடுக்கும் என்று அந்த மாநில செய்தி ஒளிபரப்பு மற்றும் திரைப்பட வளர்ச்சி துறை அமைச்சரான ஷாஜி செரியன் இன்று கேரள சட்டசபையில் தெரிவித்தார்.
இந்த அறிவிப்பை மம்மூட்டியின் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு சந்தோஷப்பட்டு வருகிறார்கள்.
தமிழ்த் திரைப்படத் துறையிலும் நடிகர் கமல்ஹாசன் திரையுலகத்தில் கால் பதித்து இன்றோடு 62 ஆண்டுகள் ஆகிறது. நடிகர் ரஜினிகாந்த் திரையுலகத்தில் காலடி வைத்து 55 ஆண்டுகள் ஆகிவிட்டது. இது போன்ற பல மூத்த சாதனையாளர்கள் 50 வருட கலையுலக வாழ்க்கையைத் தாண்டிவிட்டார்கள்.
தமிழக அரசும் கேரள அரசினை போல இந்த சாதனையாளர்களை பாராட்டி விழா எடுக்குமா என்று தமிழ்ச் சினிமா ரசிகர்கள் கேள்வியெழுப்பியுள்ளார்கள்.