Touring Talkies
100% Cinema

Friday, March 14, 2025

Touring Talkies

டி.ராஜேந்தரின் தயாரிப்பாளர் சங்கம் கலைக்கப்படுமா..?

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

டி.ராஜேந்தர் தலைமையிலான தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

நடந்து முடிந்த தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்குப் போட்டியிட்டார் நடிகரும், இயக்குநரும், தயாரிப்பாளரும், விநியோகஸ்தருமான டி.ராஜேந்தர்.

அந்தத் தேர்தலில் டி.ராஜேந்தர் தோற்க முரளி ராமசாமி வெற்றி பெற்று தலைவராகிவிட்டார். இதனால் ஏற்பட்ட கோபத்தில் டி.ராஜேந்தர் தனது ஆதரவாளர்களுடன் புதிதாக தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் என்ற பெயரில் ஒரு புதிய சங்கத்தைத் துவக்கினார்.

இந்தச் சங்கம் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து இயங்கி வந்தது. இந்த நிலையில் இந்தச் சங்கம் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்துடன் இணையப் போவதாகச் செய்திகள் வெளியாகின.

சங்கத்தின் துணைத் தலைவர்களில் ஒருவரான சிங்காரவேலன்தான் இரண்டு சங்கங்களின் இணைப்பில் ஆர்வம் காட்டி வருவதாகச் செய்திகள் தெரிவித்தன.

இதற்கு மறுப்பு தெரிவித்த சங்கத்தின் செயலாளர்களில் ஒருவரான ஜே.எஸ்.கே.சதீஷ்குமார், “தற்போது தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சிறப்பாக செயல்பட்டுக் கொண்டு வருகிறது. இந்தச் சங்கத்தைக் கலைக்க வேண்டிய அவசியம் இப்போது இல்லை. அதேபோல் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்துடன் இணைய வேண்டிய அவசியமும் ஏற்படவில்லை. நாங்கள் தனித்தே செயல்படுவோம்..” என்று கூறினார்.

இதற்குப் பதிலளித்த அந்தச் சங்கத்தின் துணைத் தலைவர்களில் ஒருவரான சிங்காரவேலன் “இது நான் மட்டுமே எடுத்த முடியவல்ல. என்னுடன் சேர்த்து சங்கத்தின் பொருளாளரான கே.ராஜன், செயலாளர்களில் ஒருவரான சுபாஷ் சந்திரபோஸ், துணைத் தலைவர்களில் ஒருவரான பி.டி.செல்வராஜ், இணைச் செயலாளர்களான பாண்டியன், அசோக் சாம்ராஜ் ஆகியோர் சேர்ந்து எடுத்த முடிவு.

சங்கத்தில் தற்போதைக்கு நாங்கள்தான் மெஜாரிட்டியாக இருக்கிறோம். நாங்கள் எடுத்த முடிவை ஏற்றுக் கொள்வதுதான் சங்கத்திற்கு சிறப்பு.

தற்போது சென்சாருக்கு விண்ணப்பிக்கும் தகுதி நமது சங்கத்திற்குக் கிடைத்துள்ளது என்றாலும், பெப்சியுடன் தொழிலாளர்களுக்கான ஊதிய உயர்வு பற்றிய பேச்சுவார்த்தைக்குச் செல்லும் தகுதியெல்லாம் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு மட்டுமே உண்டு. அவர்கள்தான் அதை பேசி முடித்துத் தீர்க்கப் போகிறார்கள்.. அதனால் நாம் அவர்களுடன் இணைந்து செயல்பட வேண்டியது அவசியமாகிறது..” என்று குறிப்பிட்டுள்ளார்.

இவருடைய ஆடியோ செய்திக்கு மீண்டும் பதிலளித்த ஜே.எஸ்.கே.சதீஷ்குமார், “எங்களது தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் தற்போது மிகவும் வலுவான நிலைமையில் இருக்கிறது. எனவே அந்தச் சங்கத்தைக் கலைக்கும் நிலைமையோ அல்லது இன்னொரு சங்கத்துடன் இணைக்க வேண்டிய விஷயமோ இப்போதைக்கு எழவில்லை. சங்கம் இப்போது இருப்பது போலவே எப்போதும் தொடர்ந்து இயங்கும்..” என்று தெரிவித்துள்ளார்.

இந்தத் தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் தற்போது தலைவராக உஷா ராஜேந்தரும், ஆலோசகராக டி.ராஜேந்தரும் இருக்கிறார்கள்.

இப்போது எழுந்துள்ள இந்த உட்கட்சிப் பூசல் எப்போது, எப்படி முடிவுக்கு வரும் என்று தெரியவில்லை.

- Advertisement -

Read more

Local News