அவ்னி சினி மேக்ஸ் நிறுவனத்தின் சார்பில் குஷ்பு மற்றும் பென்ஸ் மீடியா சார்பில் ஏ.சி.எஸ். அருண்குமார் இணைந்து தயாரித்துள்ள படம் ‘காபி வித் காதல்’.
இயக்குநர் சுந்தர்.சி தனது வழக்கமான கலகலப்பான பாணியில் இயக்கியுள்ள இந்தப் படத்தில் ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த் கதாநாயகர்களாக நடிக்க மாளவிகா சர்மா, ரைசா வில்சன், அம்ரிதா ஐயர், ஐஸ்வர்யா தத்தா ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர்.
மேலும் யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, பிரதாப் போத்தன், திவ்யதர்ஷினி (டிடி), விச்சு விஸ்வநாத், சம்யுக்தா ஷண்முகம், அருணா பால்ராஜ், பேபி விர்த்தி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
தமிழகமெங்கும் இந்தப் படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட இருக்கிறது. வரும் அக்டோபர் 7-ம் தேதி இந்தப் படம் வெளியாக உள்ள நிலையில் இந்தப் படத்தின் டிரெயிலர் மற்றும் இசை வெளியீட்டு விழா இன்று காலை சென்னையில் லீலா பேலஸ் ஹோட்டலில் நடைபெற்றது.
இந்தப் படத்தின் தயாரிப்பாளரான நடிகை குஷ்பு பேசும்போது, ‘நான் ஒரு தயாரிப்பாளராக இங்கே இருக்க, எனது கணவர் சுந்தர்.சி.தான் காரணம். ஒரு தயாரிப்பாளராக சொல்கிறேன். அவரை நம்பி தாராளமாக காசு போடலாம்.. தயாரிப்பாளர்கள் நிம்மதியாக போய் தூங்கலாம்.
இந்தப் படத்தை 35 நாட்கள் ஊட்டியில் படமாக்கினார்கள். ஒரு நாள்கூட என்னை “படப்பிடிப்பிற்கு வா” என சுந்தர்.சி அழைத்ததே இல்லை. சுத்தமா பொண்டாட்டியை மறந்திட்டாரு. என்னுடைய கல்யாண நாள் வருதேன்னு நினைச்சு நானாத்தான் அவருக்கு போன் செய்து நான் கண்டிப்பா ஊட்டி வர்றேன்.. மூணு நாள் தங்கப் போறேன்னு சொல்லிட்டுத்தான் ஊட்டிக்கு வந்தேன்.
இந்தப் படத்தில் பிரதாப் போத்தன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவர் இந்த நேரத்தில் இல்லாதது மிகுந்த மன வருத்தத்தை தருகிறது. இந்தப் படத்தில் நான் நடித்த ‘ரம்பம்பம்’ பாடலை பயன்படுத்தியுள்ளார்கள். ஆனால், அதில் ஆடுவதற்கு என்னை அழைக்கவில்லை. நாளை பாடலை படமாக்க இருக்கிறார்கள் என்றால் சென்னையில் இருக்கும் என்னிடம் அதற்கு முதல் நாள்தான் இந்தப் பாடலை படமாக்கப் போகிறோம் என்றார் சுந்தர்.சி.
அப்போது மேடையின் கீழிருந்து குறுக்கிட்ட டிடி, “நாங்க ஏற்கெனவே சுந்தர் ஸார்கிட்ட கேட்டப்போ நீங்கதான் வரலைன்னு சொல்லிட்டீங்கன்னு சொன்னாரு…” என்று உண்மையை உடைத்தார். தொடர்ந்து பேசிய நடிகைகள் “மேடமும் நடிச்சிருந்தா இன்னும் நல்லாயிருந்திருக்கும்…” என்று சொல்ல குஷ்பூ மேடையிலேயே துள்ளிக் குதித்தார்.
இதையடுத்து மேடைக்கு வந்த சுந்தர்.சி. “அவங்க அந்தப் பாட்டுக்கு ஆடுனதை ஏற்கனவே எல்லாரும் பார்த்துட்டாங்க.. அதனால்தான் வேணாம்ன்னு நினைச்சேன். இப்போ என்ன.. மறுபடியும் அவங்களை ஆட வைச்சு மீடியாவைத் தவிர மத்தவங்களுக்கு அனுப்பி வைக்கிறேன்..” என்று கூறினார்.