Sunday, September 22, 2024

‘இளைய தளபதி’ விஜய்-இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் பிரிவில் என்னதான் நடந்தது..?

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

கடந்த வாரம் கோடம்பாக்கத்தின் டாக் ஆஃப் தி வீக்காக இருந்தது விஜய்யின் 65-வது படத்தில் இருந்து இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் விலகிவிட்டார் என்பதுதான்.

இதன் காரணம், தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸிடம் ஏ.ஆர்.முருகதாஸ் அளவுக்கு அதிகமான சம்பளத்தைக் கேட்டதுதான் என்று ஒரு தரப்பு தகவல் வெளியானது.

இன்னொரு தரப்பில் முருகதாஸ் சொன்ன கதை விஜய், சன் பிக்சர்ஸ் இருவருக்குமே பிடிக்காததால் கதையை மாற்றச் சொல்லியிருக்கிறார்கள். ‘கதையை மாற்ற முடியாது’ என்று மறுத்திருக்கிறார் முருகதாஸ். அதனால், ‘வேறு இயக்குநரை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்’ என்று சன் பிக்சர்ஸ் சொன்னதால் முருகதாஸ் இந்த பிராஜெக்ட்டிலிருந்து வெளியேறிவிட்டார் என்றார்கள்.

நாம் விசாரித்தவரையில் தெரிய வந்தது இன்னொரு விஷயம்..

‘துப்பாக்கி’, ‘கத்தி’, ‘சர்க்கார்’ என்று வரிசையாக மூன்று மெகா ஹிட்டுக்களை விஜய்க்காக கொடுத்திருக்கும் தன்னிடம், இப்படி கதை கேட்டு அலையவிடுவார்கள் என்று முருகதாஸ் முதலில் நினைக்கவே இல்லை.

பொதுவாக விஜய், அஜீத் படங்களில் தயாரிப்பாளரை நிர்ணயிப்பது அவர்கள்தான். கதையையும், இயக்குநரையும், படத்தின் பட்ஜெட்டையும் மறைமுகமாகத் தீர்மானிப்பதும் அவர்கள்தான். அதுபோலத்தான் ‘விஜய்யை திருப்தி செய்தாலே போதும்’ என்று நினைத்துதான் முருகதாஸ் இந்த பிராஜெக்ட்டுக்குள் சந்தோஷமாக வந்திருக்கிறார்.

முதலில் தான் உருவாக்கிய கதைக் கருவை விஜய்யிடம் சொல்லியிருக்கிறார். விஜய்க்கு அது ‘ஓகே’வாக தெரிய.. ‘திரைக்கதையா சொல்லுங்க’ என்று முருகதாஸிடம் கேட்டிருக்கிறார். முருகதாஸும் சில நாட்கள் கழித்து படத்தின் இடைவேளைக்கு முன்பான காட்சிகள் அனைத்தையும் திரைக்கதையாக விஜய்யிடம் சொல்லியிருக்கிறார்.

விஜய்க்கு இதுவும் பிடித்துப் போயிருக்கிறது. ‘சரி.. நான் கேட்டுட்டேன். இதை அப்படியே சன் பிக்சர்ஸ்ல போய் சொல்லிருங்க’ என்று அவர்களிடத்தில் அனுப்பி வைத்திருக்கிறார் விஜய். படத்தின் முற்பாதி கதையைக் கேட்டு சன் பிக்சர்ஸும் ‘திருப்தி’ என்று விஜய்க்கு தகவல் அனுப்பிவிட்டது.

அடுத்து படத்தின் இரண்டாம் பகுதியையும் சில நாட்கள் கழித்து தயார் செய்த முருகதாஸ் விஜய்யிடம் இதைச் சொல்லியிருக்கிறார். விஜய்க்கு இதில் சில அபிப்ராய பேதங்கள் இருந்தாலும் தயாரிப்பாளரான சன் பிக்சர்ஸுக்கு இது பிடித்திருந்தால் போதுமே என்றெண்ணி.. ‘எனக்கு ஓகே.. பட் சன் பிக்சர்ஸ்லேயும் சொல்லிருங்க’ என்று சொல்லி இரண்டாவது முறையாகவும் முருகதாஸை அங்கே அனுப்பி வைத்திருக்கிறார்.

இங்கேதான் பிரச்சினை துவங்கியிருக்கிறது. படத்தின் இரண்டாவது பகுதி சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு திருப்தியாக இல்லை. ‘நிறைய மாறுதல்கள் செய்ய வேண்டும்’ என்று சொல்லியிருக்கிறார்கள். ‘விஜய்க்கே திருப்தியாகிவிட்டதே’ என்று முருகதாஸ் சொல்லியிருக்கிறார். ‘இல்லை. எங்களுக்கு திருப்தியில்லை’ என்று தயாரிப்பாளர் தரப்பு திட்டவட்டமாகச் சொல்லிவிட்டது.

‘சரி.. அப்படியானால் உங்களுக்கு வேறு கதையைச் சொல்கிறேன். இந்தக் கதையில் நான் மாற்றம் செய்ய விரும்பவில்லை’ என்று சொல்லியிருக்கிறார் முருகதாஸ். ‘புதிய கதைக்காக நாங்கள் காத்திருக்க முடியாது. உடனேயே வேண்டும்’ என்று சன் பிக்சர்ஸ் கேட்க.. ’ ஸாரி.. எனக்கு கொஞ்சம் டைம் வேண்டும்’ என்று சொல்லிவிட்டு திரும்பவும் விஜய்யிடம் வந்திருக்கிறார் முருகதாஸ்.

முருகதாஸின் எண்ணம்.. ‘இந்தக் கதை விஜய்க்கு பிடித்துப் போய்விட்டது. அதனால் இப்போது விஜய் இந்தத் தயாரிப்பாளரை விட்டுவிட்டு, வேறொரு தயாரிப்பாளரை நமக்குப் பிடித்துத் தருவார். அவருக்கு நாம் விஜய்யின் அந்த 65-வது படத்தை இயக்குவோம்’ என்கிற நினைப்பில் ‘சன் பிக்சர்ஸ்’ நிறுவனத்தை கொஞ்சம் அசால்ட்டாக ‘ஹேண்டில்’ செய்துவிட்டு வந்துவிட்டார்.

ஆனால் இங்கேதான் ஒரு மெகா டிவிஸ்ட் நடந்துள்ளது.

விஜய்யோ ‘சன் பிக்சர்ஸ்’ என்ற பிரம்மாண்டமான தயாரிப்பாளரை இழக்கத் தயாராக இல்லை. இப்போது அரசியல் ரீதியாக அ.தி.மு.க. தனக்கு எதிராக இருக்கிறது. அதனால்தான் மத்திய பா.ஜ.க. அரசிடம் சொல்லி வருமான வரித்துறையை ஏவிவிட்டு தன்னை சில நாட்கள் அலைக்கழித்தது என்பதை மறக்காமல் இருக்கிறார்.

இந்த நேரத்தில் பொருளாதாரத்திலும், அரசியல் வட்டாரத்திலும் சகல  செல்வாக்கும் உள்ள சன் பிக்சர்ஸ் நிறுவனத்தைப் பகைத்துக் கொள்ள விஜய் முற்றிலும் விரும்பவில்லை. அவருடைய இந்த எண்ணவோட்டம் முருகதாஸுக்குத் தெரியாமல் போய்விட்டது.

முருகதாஸ் சன் பிக்சர்ஸில் நடந்ததையெல்லாம் விஜய்யிடம் சொல்லிவிட்டு ‘நாம் வேற தயாரிப்பாளரிடம் இதைச் செய்யலாம்’ என்று சொல்லியிருக்கிறார்.

ஆனால் விஜய்யோ, “இந்தப் படம் சன் பிக்சர்ஸுக்குத்தான். அவங்களுக்கே கதை பிடிக்கலைன்னும்போது நான் எப்படி இதில் நடிக்க முடியும்..? நாம அப்புறமா இணையலாம்..” என்று சொல்லி முருகதாஸுக்கு விடை கொடுத்து அனுப்பிவிட்டார் விஜய்.

இப்படி முருகதாஸ் நினைத்தது வேறு.. ஆனால், நடந்தது வேறாகிவிட்டது..!

இப்போது விஜய் தனது அடுத்தப் படத்தை இயக்கும் பொறுப்புக்காக இயக்குநர்களை தேடிக் கொண்டிருக்கிறார். இந்த லிஸ்ட்டில் பேரரசு, சுந்தரி.சி.யும் இடம் பெற்றிருக்கிறார்கள்.

முன்னதாக இயக்குநர் மகிழ் திருமேனியிடம் கதை கேட்டு முடித்திருந்தாலும் அவருக்கு எதுவும் சொல்லாமல் விட்டதினால் மகிழ் திருமேனி தனது புதிய படத்தைத் துவக்கி ஷூட்டிங்கிற்குக் கிளம்பிவிட்டார். இதனால் கொஞ்சம் வருத்தப்பட்டிருக்கிறார் விஜய்.

எது எப்படியோ.. விஜய்யின் 65-வது படத்தை இயக்கப் போவது முருகதாஸ் இல்லை என்பது மட்டுமே தற்போதைக்கு உறுதியான விஷயம்.

- Advertisement -

Read more

Local News