Friday, April 12, 2024

சிம்பு-கெளதம் மேனன் படத்தின் தலைப்பு மாறியது ஏன்..?

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

சிம்புவின் நடிப்பில் இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கும் புதிய படத்தின் தலைப்பு ‘வெந்து தணிந்தது காடு’ என்ற அறவிப்பு நேற்றைக்கு வெளியானது.

இந்தத் தலைப்பு நேற்றுதான் அறிவிக்கப்பட்டது என்றாலும் இது அந்தப் படத்தின் முதல் தலைப்பு அல்ல. இரண்டாவது தலைப்பு. இந்தப் படத்திற்கு முதலில் ‘நதிகளிலே நீராடும் சூரியன்’ என்றுதான் தலைப்பு வைக்கப்பட்டிருந்தது.

இந்தத் தலைப்பு கெளதம் மேனனுக்கு சரி.. ஆனால் சிம்புவின் ரசிகர்களால் ஏற்றுக் கொள்ள முடியாமல் இருந்தது.

என்னதான் இணையத்தில் எழுதினாலும், பேசினாலும்.. சட்டென்று வாயில் வராத பெயராகவும், கவனத்தை ஈர்க்கும் பெயராகவும் இல்லாமல் கவிதைத்தனமாக இருப்பதை சிம்புவுக்கு அவரது ரசிகர்கள் பலவிதங்களில் சொல்லிக் காட்டினார்கள்.

பொதுவாகவே கெளதம் மேனனின் படங்களின் தலைப்புகளெல்லாம் வித்தியாசமாகத்தான் இருக்கும். சராசரி படங்களின் தலைப்பு போல இருக்கவே இருக்காது.

அவரது முதல் படமான ‘மின்னலே’ துவங்கி, ‘காக்க காக்க’. ‘வேட்டையாடு விளையாடு’, ‘பச்சைக்கிளி முத்துச்சரம்’, ‘வாரணம் ஆயிரம்’, ‘விண்ணைத் தாண்டி வருவாயா’, ‘நடுநசி நாய்கள்’, ‘நீதானே என் பொன்வசந்தம்’, ‘என்னை அறிந்தால்’, ‘அச்சம் என்பது மடமையடா’, ‘எனை நோக்கி பாயும் தோட்டா’, ‘துருவ நட்சத்திரம்’ என்று கடைசி படம் வரையிலும் தலைப்பிலேயே ஒரு வித்தியாசத்தைக் காட்டியிருந்தார் கெளதம் மேனன்.

இருந்தாலும் இந்த ‘நதிகளிலே நீராடும் சூரியன்’ என்ற தலைப்பு ரசிகர்களிடமிருந்து சிம்புவை ரொம்பவே பிரிக்கிறது என்பதை கெளதமிடம் பக்குவமாக எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள் தயாரிப்பாளர் ஐசரி கணேஷூம், நாயகன் சிம்புவும்.

இதனால் தலைப்பை மாற்ற ஒத்துக் கொண்ட கெளதம், கடைசியில் கதையையே மாற்றிவிட்டார். இதற்குக் காரணம் சிம்புவின் இன்னொரு பிடிவாதம்.

தனுஷ் நடிப்பில் வெளியாக அசுர வசூல் சாதனை படைத்த ‘அசுரன்’ படம் போலவே தானும் ஒரு படம் செய்ய வேண்டும். “கிராமத்துக் கதையாகவும் இருக்க வேண்டும். அனைவருக்கும் பிடித்ததுபோலவும் இருக்க வேண்டும்” என்ற சிம்புவின் விருப்பத்திற்காக தான் தயாராக வைத்திருந்த கதையைத் தள்ளி வைத்துவிட்டு சிம்புவுக்காக வேறு கதை தேடி ஆரம்பித்தார் கெளதம் மேனன்.

எழுத்தாளர் ஜெயமோகனின் கதையான ‘அக்கினிக் குஞ்சொன்று கண்டேன்’ என்ற சிறுகதை ‘அசுரன்’ பாணியில் உருவாகியிருக்கும் கதையாகத் தென்பட அதையே படமாக்கத் துணிந்துவிட்டார் கெளதம் மேனன். ஜெயமோகனையே இந்தப் படத்துக்கு திரைக்கதை, வசனம் எழுதவும் சொல்லியிருக்கிறார் கெளதம் மேனன்.

இதனாலேயே மகாகவி பாரதியார் எழுதிய ‘அக்கினிக் குஞ்சொன்று கண்டேன்’ என்ற பாடலில் ஒளிந்திருந்த இந்த ‘வெந்து தணிந்தது காடு’ என்ற வரிகளைத் தேடிப் பிடித்துத் தலைப்பாக்கியிருக்கிறார் கெளதம்.

இருந்தாலும் இப்போதும் சிம்புவின் ரசிகர்களுக்கு இந்தத் தலைப்பும் பிடிக்கவில்லையாம். “முன்னது கவிதைபோல் இருந்தது.. இப்போது கவிதையாகவே மாறிவிட்டது” என்று சிணுங்குகிறார்கள்.

எப்படியிருந்தாலும் நேற்றைக்கு திருச்செந்தூரில் இந்தப் படத்தின் படப்பிடிப்பைத் துவக்கிவிட்டார்கள். இனிமேல் தலைப்பில் திருத்தம் இருக்காது என்றாலும் ‘இது கெளதம் மேனன் படம்’ என்ற ஒற்றை விளம்பரத்தை வைத்து படத்தைத் தூக்கி நிறுத்திவிடுவார்கள் என்றே தெரிகிறது.

- Advertisement -

Read more

Local News