Friday, April 12, 2024

இளையராஜாவுக்கு ‘முதல் மரியாதை’ படம் பிடிக்காமல் போனது ஏன்..?

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜாவின் இயக்கத்தில் 1985-ம் ஆண்டு வெளியான ‘முதல் மரியாதை’ திரைப்படம் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றதோடு, இன்றுவரையிலும் பாரதிராஜாவின் படைப்புகளிலேயே தலை சிறந்ததாகவும் அமைந்திருக்கிறது.

இதுவரையிலும் வெளிவந்த சிறந்த தமிழ்த் திரைப்படங்களில் முதல் 10 படங்களின் பட்டியலில் அந்தப் படமும் இடம் பெறும். அந்த அளவுக்கு பல்வேறு சிறப்புக்களைப் பெற்றிருந்த அத்திரைப்படத்தின் பாடல்கள், இன்றளவும் மறக்க முடியாத பாடல்களாக தமிழர்களிடையே ஒலித்துக் கொண்டிருக்கிறது.

ஆனால் இத்திரைப்படம் இன்றுவரையிலும் ‘இசைஞானி’ இளையராஜாவுக்குப் பிடிக்காத படமாகவே இருக்கிறது. “ஏன் பிடிக்கவில்லை..?” என்பதற்கு இளையராஜா இன்றுவரையிலும் எந்தப் பதிலும் சொல்லாமலேயே இருக்கிறார். “எனக்குப் பிடிக்கலை…” என்று ஒற்றை வரியில் மட்டுமே பதில் சொல்லியிருக்கிறார் இளையராஜா.

இந்தப் படத்தின் ரீரெக்கார்டிங் பற்றியும், இந்தப் படம் பற்றிய இளையராஜாவின் மதிப்பீடுகள் பற்றியும் ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா தனது யுடியூப் தளத்தில் சமீபத்தில் பேசியிருக்கிறார்.

அதில், “முதல் மரியாதை திரைப்படத்தின் ஷூட்டிங்கை முடித்துவிட்டு டபுள் பாஸிட்டிவ்வை சவேரா ஓட்டலில் இருந்த தியேட்டரில் நான் இளையராஜாவுக்கு போட்டுக் காட்டினேன். அவனுக்குப் படம் பிடிக்கலை. “என்ன நீ எடுத்திருக்க..? இந்தக் காலத்துல போயி இதெல்லாம் எடுபடுமா..? இப்போதைய இளைஞர்களுக்கு இது பிடிக்குமா..? என்றெல்லாம் கேட்டான்.

ஆனால், நான் மிகவும் தன்னம்பிக்கையுடன் இருந்தேன். இந்தப் படம்தான் என் கேரியரில் தலை சிறந்த திரைப்படமாக இருக்கும் என்று அப்போதே நான் நம்பியிருந்தேன்.

ரீரெக்கார்டிங்கிற்காக இளையராஜா பிரசாத் தியேட்டரில் இந்தப் படத்தைப் பார்த்தான். முதல் ரீலை பார்த்துவிட்டு மறுபடியும், “என்னய்யா இது.. முதல் காட்சியே இப்படித்தான் இருக்கணுமா..?” என்றான். “அதெல்லாம் நீ பீல் பண்ணாத.. பி.ஜி.எம்.மை போட்டுக் கொடு..” என்றேன்.

இளையராஜாவுக்கு அந்தப் படம் பிடிக்கவில்லைதான். ஆனால் அதற்காக தரமான இசையைக் கொடுக்காமல் இல்லை. அவனுடைய ரீரெக்கார்டிங் பணியிலேயே இந்தப் படம்தான் பெஸ்ட் என்று சொல்லும் அளவுக்கு அற்புதமான பின்னணி இசையை ‘முதல் மரியாதை’ படத்திற்காகப் போட்டுக் கொடுத்தான்.

முதல் ரீலை எடுத்து அடுத்து 2-வது ரீலையும் எடுத்தான். அதுக்கும் மியூஸிக் போட்டுட்டு மூணாவது ரீலையும் எடுத்தப்பவும் ஆர்க்கெஸ்ட்ட்ரால ஒருத்தர்கூட எந்திரிச்சு வெளில போகலை. அப்படியொரு இறுக்கமா உக்காந்திருந்தாங்க.

இளையராஜா அப்பத்தான் என்கிட்ட கேட்டான், “என்னய்யா இது.. இவங்களுக்கெல்லாம் படம் பிடிச்சிருக்கு போல.. ஒருத்தர்கூட எந்திரிக்கலை..” என்றான். அப்பவே எனக்கு நம்பிக்கை வந்திருச்சு. இது நமக்குப் பெருமை சேர்க்கிற படமா இருக்கும்ன்னு..!

ரீல், ரீலா இளையராஜா பின்னணி இசை அமைக்க.. அமைக்க.. அந்தப் படம் உருவாகி வரும்போதே எனக்கு அந்தப் படத்தின் வெற்றி கண்ணுக்குத் தெரிஞ்சிருச்சு. அந்த அளவுக்கு உயிரோட்டமான இசையைக் கொடுத்திருந்தான் இளையராஜா.

ராதா படகில் இருந்து இறங்கும்போது தரையில் காலை வைத்தவுடன் குடிசையில் கட்டிலில் படுத்தியிருக்கும் சிவாஜியின் உடம்பில் ஒரு சிலிர்ப்பு வரும். அதற்கு ஒரு இசை கொடுத்திருப்பான் பாருங்க. நமக்கே ஒரு ஜெர்க் ஆகும்.

அதே மாதிரி ராதா, சிவாஜியின் கையைப் பிடித்து அதற்குள் சிவாஜியின் தலைமுடியில் பாசி மணி செய்து வைத்திருக்கும் அந்த பாசி மாலையை வைப்பார். வைத்துவிட்டு கையை எடுப்பார். பாசி மணி இப்போது வெளியில் தெரியும். இந்த இடத்திலும் கண்ல தண்ணி வர்ற அளவுக்கு இளையராஜாவின் பி.ஜி.எம். இருக்கும்.

இந்த ரீரெக்கார்டிங் வேலைகள் நடந்துக்கிட்டிருக்கும்போது திடீர்ன்னு அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆரின் வீட்டில் இருந்து எனக்கு ஒரு போன் வந்துச்சு. “எம்.ஜி.ஆர். உங்களை வரச் சொல்றாரு. வர முடியுமா”ன்னு கேட்டாங்க.

இன்னும் ஒரு ரீல் பாக்கியிருந்தது. இளையராஜா வேற ராத்திரி 8 மணிக்கு மேல வேலை பார்க்க மாட்டான். வீட்டுக்குக் கிளம்பிருவான். நாம கிளம்பினால் வேலை கெட்டிருமேன்னு தவிச்சேன்.

இளையராஜாதான் “நீ போயிட்டு வா. நான் போட்டு வைச்சிருக்கேன்…” என்று சொல்லி அனுப்பி வைத்தார். நான் ராமாவரம் தோட்டத்துக்குப் போயி எம்.ஜி.ஆரை சந்தித்துப் பேசிவிட்டு நேரா பிரசாத்துக்குத்தான் வந்தேன். வந்தால் இளையராஜா வீட்டுக்குப் போகாமல் அப்படியே ஸ்டூடியோவில் அமர்ந்திருந்தான்.

“என்னடா போகலியா..?” என்றேன். “இல்ல.. உனக்குப் பிடிக்கலைன்னா அப்புறம் ‘அதை மாத்து’.. ’இதை மாத்து’ன்னு சொல்லுவ.. அதான் இருந்து காட்டிட்டுப் போலாம்ன்னு உக்காந்தேன்…” என்றான்.

கடைசி ரீலை போட்டுக் காட்டினான். கிளைமாக்ஸில் ராதா டிரெயினில் போகும்போது இறக்கும் காட்சியிலும், உள்ளத்தை உருக்குற மாதிரி இசையைப் போட்டிருந்தான் இளையராஜா. எனக்குப் பார்க்கப் பார்க்க கண்ல தண்ணி வந்துச்சு..

அவனுக்குப் படம் பிடிச்சதோ.. பிடிக்கலையோ.. ஆனால், அவன் அந்தப் படத்துக்கு நியாயமான இசைக் கோர்ப்பை வழங்கியிருந்தான். அதுதான் எனக்கு அவனிடம் ரொம்பவும் பிடிச்ச விஷயம்..” என்று சொல்லியிருக்கிறார் ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா.

- Advertisement -

Read more

Local News