அருள்நிதி நடித்த ’டிமாண்டி காலனி’, நயன்தாரா நடித்த ’இமைக்கா நொடிகள்’ ஆகிய வெற்றிப் படங்களை இயக்கிய இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கியிருக்கும் புதிய படம் ‘கோப்ரா.’
இந்தப் படத்தில் விக்ரம் நாயகனாக நடித்துள்ளார். நாயகியாக ’கேஜிஎஃப்’ ஸ்ரீநிதி ஷெட்டி நடித்திருக்கிறார். வில்லனாக கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் நடித்திருக்கிறார். ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
விக்ரம் இந்தப் படத்தில் பல்வேறு கெட்டப்புகளில் நடிப்பதால் இப்படத்திற்கு எதிர்பார்ப்புகள் கிளம்பியுள்ளன.
’மாஸ்டர்’ திரைப்படத்தின் தயாரிப்பாளரான லலித்குமார்தான் இந்தப் படத்தையும் தயாரித்துள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு கடந்த 2019-ம் ஆண்டு மே மாதம் தொடங்கியது. ஆனால், படத்திற்கான கதையை முழுமையாக இயக்குநர் முடிக்காத காரணத்தால் படப்பிடிப்பு நீடித்துக் கொண்டே சென்றது.
இந்த நிலையில், நேற்றைக்கு ’கோப்ரா’ படத்தின் மூன்று ஆண்டு கால படப்பிடிப்பு நிறைவடைந்ததாக தனது ட்விட்டர் பக்கத்தில் நெகிழ்ச்சியுடன் அறிவித்த இயக்குநர் அஜய் ஞானமுத்து, கூடவே விக்ரம் மற்றும் படக் குழுவினருடன் இருக்கும் புகைப்படங்களைப் பகிர்ந்து அவர்களுக்கு நன்றி தெரிவித்திருக்கிறார்.
இந்தப் படத்துக்குத் திட்டமிட்ட பொருட் செலவைவிட பல மடங்கு செலவினை இயக்குநர் அஜய் ஞானமுத்து செய்ய வைத்துவிட்டார் என்று தயாரிப்பாளர் தரப்பில் வருத்தப்படுகின்றனர். இந்த நேரத்தில் இந்த டிவீட்டர் செய்தியில் தயாரிப்பாளருக்கு ஒரு நன்றியைக்கூட அஜய் ஞானமுத்து சொல்லாததுதான் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.
இது குறித்து அம்மா கிரியேசன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளரான டி.சிவா அஜய் ஞானமுத்துவின் டிவீட்டர் பக்கத்திலேயே தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்.
தயாரிப்பாளர் டி.சிவா எழுதியிருக்கும் டிவீட்டர் செய்தியில், “போட்ட பட்ஜெட்டைவிட பல மடங்கு செலவை இழுத்துவிட்டு, அதைத் தாங்கிக் கொண்டு படத்தை முடித்துக் கொடுத்த தயாரிப்பாளர் லலித்குமாருக்கு ஒரு நன்றிகூட சொல்லாத இயக்குநரை வன்மையாகக் கண்டிக்கிறேன்…” என்று சொல்லியிருந்தார்.
இதையடுத்து டி.சிவாவுக்கு அதே டிவீட்டர் பக்கத்தில் பதில் சொன்ன இயக்குநர் அஜய் ஞானமுத்து, “சார், கோப்ராவின் பட்ஜெட் அதிகமானதற்குக் காரணம் நான் இல்லை என்பதை எப்போது வேண்டுமானாலும், எங்கு வேண்டுமானாலும் என்னால் நிரூபிக்க முடியும். புரளிகளைவிட ஆதாரங்கள் தெளிவாக சத்தமாகப் பேசும். குழு என்றால் அது தயாரிப்பாளரும் சேர்ந்துதான். நான் என்றும் அவரை கைவிடவில்லை..” என்று சொல்லியிருக்கிறார்.