“மாநாடு’ படத்தின் வசூல் கணக்கு இன்னமும் தன்னிடம் தரப்படவில்லை…” என்று அந்தப் படத்தின் தயாரிப்பாளரான சுரேஷ் காமாட்சி தெரிவித்துள்ளார்.
தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியின் தயாரிப்பில், இயக்குநர் வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் நடிகர் சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றியைப் பெற்ற படம் ‘மாநாடு’.
‘மாநாடு’ படம் தியேட்டரில் ரிலீசான முதல் நாளே ரூ.10 கோடி வசூலை பெற்றதாக தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். தொடர்ந்து சில நாட்கள் தொடர்ந்து ‘மாநாடு’ படத்தின் தினசரி வசூலை ட்விட்டரில் பகிர்ந்து வந்தார் சுரேஷ் காமாட்சி.
இதே மாநாடு படத்தின் 25-வது நாளில் இந்த படம் 100 கோடி வசூல் கிளப்பில் இணைந்ததாகவும் தயாரிப்பாளர் தரப்பில் அறிவிக்கப்பட்டது. அதற்கு பிறகு ‘மாநாடு’ படம் பற்றி எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. இருந்தாலும் தியேட்டர்களில் மாநாடு படம் இன்னமும் தொடர்ந்து ஓடிக் கொண்டிருக்கிறது.
இந்த ‘மாநாடு’ படம் வெளியாகி இன்றுடன் 75 நாட்கள் ஆகிறது. இப்போதுகூட இந்தப் படத்தின் வசூல் கணக்கு தயாரிப்பாளரான தன்னிடம் தரப்படவில்லையென்று இந்தப் படத்தின் தயாரிப்பாளரான சுரேஷ் காமாட்சி வேதனையுடன் தனது டிவீட்டர் பக்கத்தில் செய்தி ஒன்றை பதிவிட்டுள்ளார்.
அதில், “நாளை 75-வது நாள் ‘மாநாடு’. ‘ரோகிணி’யில் கோலாகலம் காண்கிறது. 75 நாட்கள் ஆகியும் இன்னமும் விநியோகஸ்தர்கள் கணக்கு ஒப்படைக்கவில்லை. ஒரு வெற்றிப் படத்திற்கே இந்த நிலைன்னா… மற்ற படங்களின் நிலையை என்ன சொல்ல..? இப்படி இருந்தால் எப்படி தொழில் செய்ய…?” என்று கேள்வியெழுப்பியுள்ளார்.
தோல்வியடைந்தாலும் பிரச்சினை.. வெற்றியடைந்தாலும் பிரச்சினை.. சினிமாவுலகத்தில் நிஜத்தில் நடப்பதுதான் என்ன..? யாருக்கும் தெரியவில்லை..!