குழந்தை நட்சத்திரமாக தமிழ்த் திரையுலகில் அறிமுகமான மீனா, ஹீரோயினாகவும் நீண்ட காலம் ஜொலித்தார். ரஜினி, கமல், அஜித், விஜய் என முக்கிய நாயகர்களுக்கு ஜோடியாக நடித்தார். பிறகு குணச்சித்தர கதாபாத்திரங்களிலும் நடித்தார்.
இதற்கிடையே பெங்களூருவை சேர்ந்த மென் பொறியாளர் வித்யாசாகர் என்பவரை கடந்த 2009ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு நைனிகா என்ற மகள் உள்ளார்.
இந்நிலையில் கடந்த ஜூன் மாதம், நோய்த்தாக்குதலால் வித்யாசாகர் மரணமடைந்தார். அவருக்கு இறுதிச் சடங்குகளை மீனாதான் செய்தார்.
அப்போதே, “ஒரு பெண், இறுதிச்சடங்கு செய்யலாமா” என்று சிலர் விமர்சனம் செய்தனர்.
இன்று வரை அந்த விமர்சனம் தொடர்கிறது. இதற்கிடையே சில நாட்களுக்கு முன் மீனா அளித்த பேட்டி ஒன்றில், “பெண் இறுதிச் சடங்கு செய்யலாமா என்ற கேள்வி என்னை தொடர்ந்துகொண்டே இருக்கிறது. இக்கேள்வியைத் தவிர்க்கவே நினைத்தேன். இதே கேள்வி தொடர்வதால் பதில் சொல்கிறேன். மனிதர்களில் ஆண் என்ன பெண் என்ன? இருவரில் உயர்வு தாழ்வு என்பது ஏன்? என் கணவரை என்னைவிட வேறு யாரும் அதிகம் நேசித்திருக்க முடியாது. அவருக்கு நான் இறுதிச் சடங்கு செய்ததுதான் சரி” என தெரிவித்து கண்கலங்க வைத்துவிட்டார் மீனா.
கலங்க வைத்தது மட்டுமல்ல.. தான் புதுமைப்பெண் என்பதையும் நிரூபித்துவிட்டார் மீனா!