தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் தற்போது எச். வினோத் இயக்கும் ‘ஜன நாயகன்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் வரும் ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி உலகளவில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. ‘ஜன நாயகன்’ படத்திற்கு பின்னர், விஜய் முழுநேர அரசியலில் ஈடுபட உள்ளதாகவும், இது அவருடைய கடைசி திரைப்படம் என்பதால், ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். வில்லனாக பாபி டியோல் நடித்துள்ளார். இவர்களுடன் நரேன், மமிதா பைஜூ, பிரியாமணி உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தில் விஜய் ‘தளபதி வெற்றி கொண்டான்’ என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் என கூறப்படுகிறது.

இந்நிலையில், சமூக வலைதளங்களில் ‘ஜன நாயகன்’ திரைப்படம் தெலுங்கு திரைப்படமான ‘பகவந்த் கேசரி’யின் ரீமேக் என்பதாக பேசப்பட்டு வருகிறது. இதேசமயம், ‘பகவந்த் கேசரி’ திரைப்படத்தின் ரீமேக் உரிமையை ‘ஜன நாயகன்’ படக்குழு அதிகாரபூர்வமாக பெற்றுவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தற்போது கிடைத்துள்ள புதிய தகவலின்படி, ‘பகவந்த் கேசரி’ படத்தில் இடம்பெற்ற “Good Touch & Bad Touch” என்ற ஒரு முக்கிய காட்சியை ‘ஜன நாயகன்’ படத்தில் ரீமேக் செய்ய உள்ளனர். இந்த காட்சியை பயன்படுத்தும் பொருட்டு, ரிலீஸுக்கு பிறகு எந்தவிதமான சட்ட சிக்கலும் ஏற்படாமல் இருக்க, ‘பகவந்த் கேசரி’ படத்தின் ரீமேக் உரிமையை அதிகாரபூர்வமாக பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.