இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில், நடிகர் விஜய் நடித்த ‘தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்’ திரைப்படம் கடந்த ஆண்டு வெளியானது. இதில் மீனாட்சி சவுத்ரி, சிநேகா, பிரபுதேவா, பிரசாந்த், மோகன், ஜெயராம் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்தனர். இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்திருந்தது, இசையை யுவன் சங்கர் ராஜா அமைத்திருந்தார்.படம் வெளியான பிறகு, அதன் வசூல் நிலவரம் குறித்த பல போஸ்டர்கள் தயாரிப்பு தரப்பால் வெளியிடப்பட்டன. இறுதியாக, ‘தி கோட்’ ரூ.450 கோடி வசூலித்தது என்று தெரிவித்தனர்.

தற்போது, ஏஜிஎஸ் நிறுவனத்தின் அடுத்த தயாரிப்பாக, அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில், பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘டிராகன்’ திரைப்படம் பிப்ரவரி 21ம் தேதி வெளியாகிறது. இதற்கான புரமோஷன் தொடர்பாக, தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி பேட்டியளித்து வருகிறார்.அவரிடம் ‘தி கோட்’ படத்தின் வசூல் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் பதிலளிக்கையில், “தி கோட் ரூ.450 கோடி வசூல் செய்ததாக பலர் கூறுகிறார்கள். இதில் திரையரங்கு வசூலைத் தவிர, பிற வியாபாரங்கள் சேர்க்கப்படவில்லை. அவற்றையும் சேர்த்தால், அந்த தொகை இன்னும் அதிகமாக இருக்கும்.

நாங்கள் தெரிவித்தது, திரையரங்கில் மட்டும் கிடைத்த மொத்த வசூல். அதிலிருந்து வரிகளை கழித்து கணக்கிட வேண்டும். பெரிய படங்களுக்குப் படம் வெளியாகும் முன்பே திரையரங்கு வசூலைத் தாண்டிய வருவாய்களைப் பெறுவதில் பெரும் ஆதாரம் இருக்கும். அதிலிருந்து பெரும்பான்மையான தொகையை திரும்ப பெற முடியும். திரையரங்க வசூலில் இருந்து கிடைக்கும் பெரும்பகுதி லாபமாக இருக்கும்,” என கூறினார்.