1985-ம் ஆண்டு வெளியான பொருத்தம் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ரேனுகா. தொடர்ந்து மதுரைக்கார தம்பி என்ற படத்தில் நடித்த இவர், டி.ராஜேந்தரின் என் தங்கை கல்யாணி படத்தில் நடித்திருந்தார். அதன்பிறகு ஒருசில தமிழ் படங்களில் நடித்திருந்த ரேனுகா தமிழில் வாய்ப்பு கிடைக்காத நிலையில் மலையாள சினிமாவில் என்ட்ரி ஆகியுள்ளார்.
அங்கு மம்முட்டி மோகன்லால் உள்ளிட்ட நடிகர்ளுடன் இணைந்து பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ள ரேனுகா மலையளத்தில் சுமார் 70 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். அதனைத் தொடர்ந்து மீண்டும் தமிழில் என்ட்ரி கொடுத்த அவர், பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார். மேலும் இயக்குனர் இமயம் பாலச்சந்தருடன் சுமார் 24 வருடங்கள் பயணித்துள்ளார்.
தற்போது சித்ரா லட்சுமணன் தொகுத்து வழங்கி வரும் சாய் வித் சித்ரா என்ற நிகழ்ச்சியில் பேசியுள்ள நடிகை ரேனுகா, “எனது பூர்வீகம் திருச்சி ஸ்ரீரங்கம். வக்கீலாக இருந்த எனது அப்பா இறந்ததை தொடர்ந்து நாங்கள் குடும்பத்துடன் சென்னை வந்தோம். அப்போது நண்பர் ஒருவர் உதவியுடன் நாடங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதில் எனது முதல் நாடகம் திருச்சியில் அரங்கேறியது. அதன்பிறகு இந்தியா முழுவதும் பல இடங்களில் நாடகங்களில் நடித்துள்ளேன்.
தொடர்ந்து சினிமாவில் நடிப்பதற்காக வாய்ப்பு தேடும்போது டி.ராஜேந்தர் அவரின் படத்திற்கு நாயகி தேடிக்கொண்டிருப்பதாக தெரிந்தது. அவரை என்று பார்த்தபோது அந்த படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த படம்தான் சம்சார சங்கீதம். இந்த படம் 225 நாட்களுக்கு மேல் ஓடியது. படப்பிடிப்பு தளத்தில் டி.ராஜேந்தர் அடிக்கடி டயலாக்கை மாற்றிக்கொண்டே இருப்பார். கொஞ்சம் தவறு செய்தாலும் கசாமுசா என்று திட்டுவார். அப்போது ஒவ்வொரு நாளும் நான் அழுதது தான் அதிகம். ஆனாலும் எப்படி நடிக்க வேண்டும் என்று சொல்லிக்கொடுப்பார்” என்று கூறியுள்ளார்.