வரும் தீபாவளியன்று இயக்குநர் ஆனந்த் சங்கரின் இயக்கத்தில் நடிகர்கள் விஷால், ஆர்யா நடித்த ‘எனிமி’ படம் திரைக்கு வரவிருக்கிறது. அதே நாளில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ‘அண்ணாத்த’ திரைப்படமும் வெளியாகிறது.
இதனால் ‘எனிமி’ படத்திற்குத் தியேட்டர்கள் கிடைக்காத சூழல் ஏற்பட்டிருந்தது. பெரும்பாலானா அனைத்து மால் தியேட்டர்களிலும் அனைத்து ஸ்கிரீன்களிலும் ‘அண்ணாத்த’ படத்தை மட்டுமே வெளியிடுவதற்கு அந்தப் படத்தை வெளியிடும் உதயநிதி ஸ்டாலினின் ‘ரெட் ஜெயன்ட் மூவிஸ்’ நிறுவனம் ஏற்பாடு செய்திருந்தது.
இதனால் ‘எனிமி’ படத்தின் தயாரிப்பாளரான வினோத்குமார் மனம் வெதும்பி ஒரு ஆடியோ செய்தியை வெளியிட்டிருந்தார். “எனக்கு வெறும் 250 தியேட்டர்கள் கிடைத்தால்கூட போதும்.. அதுவும் கிடைக்கவில்லையென்றால் தனி நபராக போராடுவேன்…” என்று சொல்லியிருந்தார்.
எப்படியும் ‘எனிமி’ வெளியாகாது என்ற சூழல் இருந்த நிலையில் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு ‘எனிமி’யின் தீபாவளி ரிலீஸ் உறுதியானது.
இந்த நிலையில் ‘எனிமி’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் இது குறித்து நடிகர் விஷால் பேசும்போது, “உதயநிதி ஸ்டாலினிடம் பேசி தியேட்டர்களை எங்களுடைய படத்திற்குப் பெற்றிருக்கிறோம்…” என்றார்.
அவர் இது குறித்துப் பேசும்போது, “10 வருடங்களுக்கு முன்னால் தீபாவளிக்கு 4 படங்கள்தான் வரும். அப்போது தமிழகத்தில் மொத்தமாக 1200 தியேட்டர்கள் இருந்தன. ஆனால் இப்போது 900 தியேட்டர்கள்தான் உள்ளன.
எங்களுடைய தயாரிப்பாளர் 250 தியேட்டர்கள் போதும் என்று நியாமான கோரிக்கையைத்தான் முன் வைத்தார். தயாரிப்பாளர் வினோத் 250 தியேட்டர்கள் வேண்டும் எனக் கேட்டதில் தவறில்லை.
இதற்காகப் பின்னர் நாங்கள் உதயநிதியிடம் பேசினோம். இப்போது உறுதியான தியேட்டர்களின் எண்ணிக்கை 242. கொஞ்ச நேரத்திற்கு முன்பாகத்தான் ஒரு தியேட்டர் உறுதியானது.
இப்போது சினிமாவில் சோலோ ரிலீஸ் என்பது வாய்ப்பே கிடையாது. ரஜினி சாருக்கு என்று ஒரு வியாபாரம் இருக்கிறது அவர் படங்களின் பட்ஜெட் அப்படி, வியாபாரம் அப்படி. இந்தப் படத்தையும் மிகப் பெரிய பட்ஜெட்டில் மிகப் பெரிய ஸ்கேலில்தான் தயாரித்துள்ளோம். அதற்கேற்ற வெளீயீடும் இதற்குத் தேவைதான். அது இப்போது நடந்திருக்கிறது. இதனால் எங்களுக்கு சந்தோஷம்தான்..” என்றார்.