நகைச்சுவை நடிகர் முத்துக்காளையை தெரியாதவர்கள் இருக்க முடியாது. ‘செத்து செத்து விளையாடும்’ இவரது காமெடியை ரசிக்காமல் இருக்க முடியாது.
ஊரையெல்லாம் சிரிக்க வைத்தாலும், இவரது வாழ்க்கை சோகமாகத்தான் இருந்தது. அதிலிருந்து மீண்டதை சமீபத்தில் ஒரு பேட்டியில் குறிப்பிட்டார் முத்துக்காளை.
அவர், “எதார்த்தமா ஆரம்பிச்ச குடிப்பழக்கம், கொஞ்சம் கொஞ்சமா அதிகரிக்க ஆரம்பிச்சுது. ஒரு கட்டத்துல ராத்திரி ஆனா குடிக்காம இருக்க முடியாது. இந்த நிலையில, ஒரு முறை படப்பிடிப்புக்காக பழனி போனேன். ஷூட்டிங் முடிஞ்சி ராத்திரி, ரூமுக்கு போனேன்.
அங்கே என் மனைவி, குழந்தைகள் எல்லாம் பேசற சத்தம் கேட்டது. அவங்க சென்னையில இருக்காங்க.. எப்படி இதுன்னு குழப்பம். அவங்க சத்தம் மட்டுமில்ல.. ஆன் பண்ணாமலேயே டி.வி. சத்தம், லாரி – பஸ் ஓடுற சத்தம், படப்பிடிப்புல ஆளாளுக்கு பேசினது.. எல்லாமும் ஆளே இல்லாத அந்த அறையில கேக்குது.
தூக்கம் வரலை.. தாங்க முடியல. தினமும் இதே தொல்லை. தூங்கறதுக்காக இன்னும் அதிகமா குடிக்க ஆரம்பிச்சேன்.
ஒரு நாள் நண்பர் மூலமா மருத்துவர்கிட்ட போனேன். அவர்தான், ‘அதீத குடிதான் இப்படி காதுல சத்தம் கேக்குறதுக்குக் காரணம்’னு புரிய வச்சி சிகிச்சை கொடுத்தாரு. அதுக்கு அப்புறம் ஏ.ஏ. அமைப்பின் கூட்டங்களுக்கு போக ஆரம்பிச்சேன்.
இப்போ குடிய முழுசா விட்டு அஞ்சு வருசம் ஆவுது.
சாராயம் தர்ற போதையைவிட, கம்பீரமா – தெம்பா வாழறது, மனைவி குழந்தைகளை நல்லபடியா வச்சுக்கிறது அப்படிங்கிற போதை.. இந்த நல்ல போதை.. நல்லா இருக்கு.
சாராயத்துக்கு பழகினவங்க யாரா இருந்தாலும் என்ன மாதிரி தப்பிச்சு வரலாம்.. அதுக்கு நானே உதாரணம்” என்கிறார் கம்பீரமாக.